திங்கள், 1 ஜூலை, 2019

முஹர்ரம் மாதத்தின் முக்கிய சில நிகழ்வுகள்.


முஹர்ரம் மாதத்தின் முக்கிய சில நிகழ்வுகள்.


இஸ்லாமிய மாதங்களில் துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப் ஆகிய நான்கு மாதங்களும் சிறப்பான மாதங்களாகும். அதனால் இந்த மாதங்கள் மனித துவக்க காலத்தில் இருந்து கண்ணியப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் முஹர்ரம் மாதம் ஷஹ்ருல்லாஹ்  அல்லாஹ்வின் மாதம் என்ற சிறப்பினைப் பெறுகிறது.
இந்த மாதத்தின் பத்தாம் நாள் நமக்கு முன்சென்ற வேதக்காரர்களால் மட்டுமன்றி முஷ்ரிகீன்களினாலும் கண்ணியப்படுத்தப்படுகின்றன. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஹிஜ்ரத்திற்கு முன்னும் இந்த நாளில் நோன்பிருந்திருக்கின்றார்கள். ரமழான் மாத நோன்பு விதியாகுவதற்கு முன் இந்த நாளின் நோன்பினை நோற்குமாறு ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். கடமையான ரமழான் மாத நோன்பின் பின்னர் நோற்கப்படும் நோன்புகளில் இந்த நோன்புக்கு ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் முன்னுரிமை கொடுத்துள்ளார்கள்.
இந்த மாதத்தின் சிறப்புக்களைச் சுமந்துள்ள நூற்கள் சகல மொழிகளிலும் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் மௌலானா முப்தி அப்துஸ் சத்தார் தேவபந்தி எழுதிய ஷஹாதத் இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு என்ற நூலைத் தெரிவு செய்து அதிலிருந்து சில தகவல்களை நாமும் இங்கே பதிவு செய்கின்றோம். காரணம்,
மௌலானா முப்தி அப்துஸ் சத்தாரினால் எழுதப்பட்டுள்ள இந்நூல் ஹழ்ரத் முஜத்தித் அல்புஸ் ஸானி, மௌலவி அஷ்ரப் அலி தானவி, மௌலவி ரஷீத் அஹ்மத், மௌலவி முஹம்மத் தய்யிப், முப்தி முஹம்மத ஷபீஃ, மௌலவி யூஸுப் லுத்யாணவி, மௌலவி அபுல் ஹசன் அலி நத்வி, மௌலவி முஹம்மத் தகி உஸ்மானி போன்றவர்களின் கருத்துக்கள் இதில் ஒன்று திரட்டப்பட்டிருக்கின்றன என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் இடம்பெற்ற வரலாற்று நிகழ்வுகள்.
Ø   முதல் மனிதர் நபிய்யுல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தவ்பா அங்கீகரிக்கப்பட்டது.
Ø   நபிய்யுல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸல்லாம் அவர்களும் அவர்களின் சமூகமும் பிர்அவ்னின் பிடியில் இருந்து பாதுகாப்பு பெற்றுள்ளனர்.
Ø   ஹழ்ரத் நபிய்யுல்லாஹ் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல் ஜூதி மலையில் கரை ஒதுங்கியது.
Ø   ஹழ்ரத் நபிய்யுல்லாஹ் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீனின் வயிற்றில் இருந்து வெளி வந்தார்கள்.
Ø   ஹழரத் நபிய்யுல்லாஹ் யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கிணற்றில் இருந்து வெளிப்படுத்தபாட்டார்கள்.
Ø   ஹழ்ரத் நபிய்யுல்லாஹ் ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்து வாழ்ந்து வானத்துக்கு உயர்தப்பட்டுள்ளார்கள்.
Ø   ஹழ்ரத் நபிய்யுல்லாஹ் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தவ்பா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
Ø   ஹழ்ரத் நபிய்யுல்லாஹ் யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கண் பார்வை மீண்டுள்ளது.
Ø   ஹழ்ரத் நபிய்யுல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்துள்ளார்கள்.
இந்நிகழ்வுகளை இமாம் ஐனி ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அன்னவர்கள் ஷர்ஹுல் புகாரி யில் பதிவு செய்துள்ளார்கள். அத்துடன் ஹழ்ரத் நபிய்யுல்லாஹ் அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆரோக்கியம் அடைகிறார்கள். ஹழ்ரத் நபிய்யுல்லாஹ் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அரசாட்சி அளிக்கப்பட்டது போன்ற  தகவல்களையும் இமாம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
இவை தவிர பின்வரும் நிகழ்வுகளும் இந்த மாதத்தின் பத்தாம் நாளில் இடம்பெற்றுள்ளதாக வேறு சில நூற்களில் பதிவாகியுள்ளதாக முஹர்ரமுல் ஹராம்  ஓர் ஷஹாதத் இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு என்ற நூலின் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது அவையாவன:
Ø   ஹழ்ரத் நபிய்யுல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
Ø   ஹழ்ரத் நபிய்யுலாஹ் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானத்திற்கு உயர்தப்பட்டுள்ளார்கள்.
Ø   ஹழ்ரத் நபிய்யுல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கலீலாகத் தெரிவானார்கள்.
Ø   ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அன்னவர்களை மணந்துகொண்டுள்ளார்கள்.
Ø   மறுமை நாள் உருவாகும்.
Ø   ஹழ்ரத் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் ஷஹீதானார்கள் என்பனவைகளைக் குறிப்பிடலாம்.
கர்பலாவில் கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள்.
அல்லாஹ்வின் பேரருளான பெருமானார் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பேரர் ஹழ்ரத் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி நாலாம் வருடம்  பான்  மாதம் பிறை ஐந்தில் பிறந்து ஹிஜ்ரி 61 முஹர்ரம் மாதம் பத்தில் ஷஹீதானார்கள்.
இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு பிறந்தபோது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களே தன் பேரருக்கு அதான் இகாமத் சொல்லி காதில் ஊதி, வாயில் உணவூட்டியும் வைத்தார்கள். பெயர் வைத்து அகீகாவும் கொடுத்தார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம்வர்களினால் அதிகம் நேசிக்கப்பட்டார்கள். சுவன வாலிபத் தலைவர் என்று சான்றும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். இமாம் அவர்கள், ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுடன் உருண்டு பிரண்டு விளையாடும் பாக்கியம் பெற்றவர்கள்.
செய்யிதுனா ஹுஸைன் ரலியல்லாஹு அவர்கள் எந்த இடத்தில் என்ன நேரத்தில் ஷஹீதாவார்கள் என்பதை முன்கூட்டியே ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தன் தோழர்களுக்கு அறிவித்திருந்தார்கள். மண் உள்ள போத்தல் ஒன்றினைக் கொடுத்து அதிலுள்ள மண் எப்போது இரத்தமாக மாறுமோ அப்போது ஹழ்ரத் அவர்கள் ஷஹீதாக்கப்பட்டிருப்பார்கள் என்றும் முன்னறிவுப்புச் செய்திருந்தார்கள்.
ஹழ்ரத் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் (இராக் நாட்டின் கர்பலா மண்ணில்) ஷஹீதாக்கப்படுவார்கள் என்ற விடயத்தினை அருமையான தோழர் பெருமக்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மூலமாக அறிந்து வைத்திருந்த காரணத்தினால் ஹழ்ரத் அவர்களை  கர்பலாவுக்கு செல்லவிடாது பல ஸஹாபாக்கள் தடுக்கின்றார்கள். ஆனாலும்கூட அவர் எவருடைய பேச்சையும் ஏற்றுக்கொள்ளவில்லை. என்ன ஆனாலும் பரவாயில்லை நான் போவேன் என்றே  துணிந்து நின்றார்கள்.
உங்களது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று நண்பர்கள் உறவினர்கள் தெளிவாகவே தெரிவித்த பின்னரும்  சகலரின் கருத்துக்களையும் தட்டிவிட்டு அங்கு சென்று தன் உயிரை தியாகம் செய்துகொன்டார்கள்.  காரணம், ஹழ்ரத் அவர்களுக்கு ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கனவில் தோன்றி அதற்கான உத்தரவினை வழங்கியதே  அன்றி வேறில்லை.
உம்முல் முஃமினீன் உம்மு ஸல்மா ரலியல்லாஹு அன்ஹா அன்னவர்களின் கனவில் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் தோன்றி இப்போது ஹழ்ரத் அவர்கள் ஷஹீதாக்கப்பட்டுவிட்டார்கள். நான் அங்கிருந்துதான் வருகின்றேன் என்றும் அறிவித்துச் சென்றுள்ளார்கள். இதுபோன்றதொரு கனவினை ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அன்னவர்களும் கண்டிருக்கின்றார்கள்.
ஹழ்ரத் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களும் அவர்களது சொந்தங்களும் ஷஹீதாக்கப்பட்ட பின்னர் சில மாதங்கள் ஆகாயங்களும் அதன் கவலையை வெளிப்படுத்தியிருக்கின்றன. அந்த வகையில் சூரிய ஒளி இரத்த நிறத்தில் தென்பட்டிருக்கிறது. ஜின்களும் அழுதிருக்கிறனர். பார்க்க: ஷஹாதத் ஹுஸைன் மௌலானா அப்துஸ் சத்தார் தேவபந்தி.
முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் உங்கள் உறவுகளுக்கு விருந்தளியுங்கள்.
முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் யார் தன்னுடைய குடும்ப உறவுகளுக்கு நல்ல முறையில் செலவுகள் செய்கின்றாரோ அவரின் முழு வருடத்தினையும் அல்லாஹ் செழிப்பாக்கி வைக்கின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.
இந்தத் தகவலினை அறிவிக்கும்  ஹழ்ரத் சுப்யான் பின் உயைனா அவர்கள் இந்த விடயத்தினை தன்னுடைய வாழ்வில் அனுபவித்ததாகவும் அவர் கூறுகிறார். எனவே சிறப்பான இத்தினத்தில் உங்கள் குடும்பத்தினர்களுக்கு உதவி ஒத்தாசை புரிவது போன்று ஏழை எளியவர்களுக்கும் உதவி செய்து கொள்ளுங்கள். ஹழ்ரத் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் பேரில் பாத்திஹாவும் ஓதிக்கொள்ளுங்கள் என்றும் மேற்சொன்ன நூலில் பதிவாகியுள்ளது.
ஹழ்ரத் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களுடன் சுமார் 72 பேர்கள் ஷஹீதானார்கள். புதல்வர் அலி அஸ்கரும் சகோதரி சைனபும் கர்பலாவில் ஷஹீதாக்கப்படவில்லை. பாதுகாப்புடன் மதீனா முனவ்வராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஹழ்ரத் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் ஷஹீதாக்கப்பட்ட பின்னர் அவர்களின் தலை வெட்டி எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும் அந்த தலை எவ்விடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டதென்பதில் பல கருத்துக்கள் நிலவுகின்றன. 
துண்டிக்கப்பட்ட தலை திமஷ்கில் இருந்து யசீதுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டதென்றும் பின்னர் அங்கிருந்து அஸ்கலான் என்ற ஊருக்கு  எடுத்துச் செல்லப்பட்டு அதன் பின்னர் கெய்ரோவில் நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. கெய்ரோவில் இன்றும் மஸ்ஜித் ஹுசைனில்  தலை அடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தர்கா உள்ளது. அதனை மக்கள் தினமும்  ஸியாரத் செய்து வருகின்றார்கள் இவ்விடத்தில் பிரார்த்தனைகள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படுவதை நான் நிதர்சனமாக கண்டிருக்கின்றேன்.
யூதர்களின் உற்பத்திப்பொருளான ஷீஆக்களுக்கு பெரும் சவாலாக இருந்தவர்களில்  அஷ்ஷைக் அப்துல் அஸீஸ் முஹத்தித் திஹ்லவி அவர்கள் முக்கியமான ஒருவர். துஹ்பா இத்னா அஷரிய்யா என்றதொரு நூலை அவர்களுக்கு எதிராக எழுதியவர். அப்படிப்பட்ட பெரியார் அவர்கள்  முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளில் ஹழ்ரத் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் பற்றி பாடம் நடத்தி வந்திருக்கிறார்கள். ஆஷூரா தொழுகை என்றதொரு தொழுகை தம்முடைய முன்னோர்களால் தொழப்பட்டி ருப்பதாக தெரிவித்திருக்கிறார். பார்க்க: மஜ்மூஆ கமாலாத்தே அஸீஸிய்யா.
ஹழ்ரத் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் அகமியம்.
ஹுசைன்தான் ஷாஹ் ஆகவும் பாதுஷாவாகவும் இருக்கின்றார்கள்.
தீனாக இருப்பதும் ஹுசைன்தான். தீனுக்கு பாதுகப்பளிப்பதும் ஹுசைன்தான்.
யசீதுக்கு ஹுஸைன் தன் தலையினைக் கொடுத்தார்கள். கரத்தினைக் கொடுக்கவில்லை.
லா இலாஹ இல்லல்லாஹ்வின் அஸ்திவாரமே ஹுசைன்தான். இதுதான் யதார்த்தம். இத்தகவலும் மேற்சொன்ன நூலின் பக்கம் 180ல் பதிவாகியுள்ளது.
1339 வது ஆண்டு நினைவு தினம்.
இன்று (10-09-2019) சுவன வாலிபத் தளபதி, சுவனத்தின் ரோஜா இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 1339 வது ஆண்டு நினைவு தினம்.
இறைவா நான் ஹுஸைனை நேசிக்கின்றேன். நீயும் அவரை நேசிப்பதோடு அவரை நேசிப்பவரையும் நீ நேசித்துக்கொள் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். இதனடிப்படையில் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பேரரை நேசிக்கும் பாக்கியம் பெற்ற அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தினர்களான நாம் இந்நாளில் இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு பற்றிக்கூற கடமைப்பட்டுள்ளோம். காரணம், இமாம் அன்னவர்களின் நினைவு தினம் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் கொள்கைகளை சுமந்துகொண்டிருக்கும் சிறப்பான தினமாகும்.
தொடரும்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...