செவ்வாய், 25 ஜூன், 2019

கலிமாவின் பொருள்...........


கலிமாவின் பொருள்




லா இலாஹ இல்லல்லாஹ் என்பது திரு மறை வசனமாகும். இதற்கு கலிமதுன் தய்யிபதுன் என்றும் கலிமதுத் தவ்ஹீத் என்றும் சொல்லப்படும். இது எல்லா நபிமார்களும் சொன்ன வார்த்தையயுமகும். அல்லாஹ் அல்லாத இலாஹே இல்லை என்பது இதற்கான நேரடிக் கருத்தாகும். அதாவது வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தவொரு இலாஹும் இல்லை என்பது இந்தக் கலிமாவின் விளக்கமாகும்.

லா இலாஹ இல்லல்லாஹ் - அல்லாஹ் அல்லாத எந்தவொரு இலாஹும் இல்லை என்று அல்குர் ஆனில் கூறப்பட்டிருப்பது போல

لاإله إلا هو

அவனல்லாத இலாஹில்லை

ما لكم من إله غيره

அவனல்லாத இலாஹு உங்களுக்கில்லை

من إله غيره

அல்லாஹ் அல்லாத இலாஹு யார்?

أإله مع الله

என்ன? அல்லாஹ்வுடன் வேறு இலாஹ் உண்டா?

لا إله إلا أنت

உன்னைத் தவிர வேறு இலாஹில்லை

لاإله إلا أنا

என்னல்லாத இலாஹி;லை

لا إله غيرك

உன்னல்லாத இலாஹில்லை

أم لهم إله غير الله
அல்லாஹ் அல்லாத இலாஹ் அவHகளுக்கு உண்டா

இவ்வாறு இன்னும் பல இடங்களில் அல்லாஹ் அல்லாத இலாஹே இல்லை என்று அல்குர்ஆனும் அல்ஹதீதும் அறிவுறுத்திக் கொண்டிருக்கிறது.

 இலாஹுன் என்றால் என்ன?

அலிஹ என்றால் வணங்கினான் என்பது மொழி அர்த்தமாகும். எனவே விக்ரகங்கள் வணக்கத்திற்கு தகுதியானவைகள் எனக் கருதி அவர்களாகவே அவற்றை இலாஹுகளாக (வணங்கும் பொருட்களாக) எடுத்துக் கொண்டார்கள் என்று அஸ்ஸிஹாஹ் என்ற நூலில் ஜௌஹரி  என்பவர் குறிப்பிடுகிறார்.

ஒரு பொருள் எப்பொழுது வணங்கப்படுமோ அப்பொழுது அந்தப்  பொருள் இலாஹாக ஆகிவிடும். வணங்கப்படும் அந்தப் பொருள் வணங்குபவருக்கு உணவளிக்கும். அவரைப் படைத்துப் பரிபாலிக்கும் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் வந்து விடும் என்று தஹ்தீபுல் லுஙா என்பதில் பதிவாகியுள்ளது.

அல்லாஹ் ஒருவனே இலாஹ் ஆகும். அவனல்லாதவற்றை எவர் இலாஹாக எடுத்துக் கொள்கிறாரோ அவரிடம் அது வணங்கப்படுவதற்கு தகுதி பெற்ற பொருளாகவே அவர் காண்கின்றார் என இப்னு மன்ழுர் குறிப்பிடுகிறார்.

الإله: معناه المعبود أو المستحق للألوهية والعبادة

வணங்கப்படுபவன். அல்லது வணக்கத்திற்கு அருகதையானவன் என்பது அதன் பொருளாகும் என இமாமுனா பைஹகீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அல்-அஸ்மாயி வஸ்ஸிபாதி என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். இமாம்களான ஹாகிம், இப்னு ஹஜர் ஆகியோரும் இதே கருத்தினை ஆதரிக்கின்றனர்.

الإله هو المعبود سواء عبد بحق أو بباطل ثم غلب فى عرف الشرع على المعبود بالحق

உண்மையாக அல்லது பொய்யாக வணங்கப்படுவதற்கு இலாஹுன் எனப்படும். பின்னர் மார்க்கத்தில் உண்மையில் வணங்கப்படுபவனுக்கு சொல்லப்பட்டுவிட்டது என்று இமாமுனா ராஸி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது தப்சீரில் குறிப்பிடுகிறார்கள்.

كل ما اتخذ معبودا بحق أو بغير حق

உண்மையாக அல்லது பொய்யாக எதுவெல்லாம் வணங்கப்படுமோ அதற்கு இலாஹுன் என்று சொல்லப்படும் என அரப் மொழிக்கான அகராதிகள் கூறுகிறது.

மனு, ஜின்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி நான் படைக்கவில்லைஎன்ற திருமறை வசனத்திற்கு என்னை அறிவதற்காகவே  அன்றிப் படைக்கப்படவில்லையென்றும் பொருள் கூறப்படுகிறது. அதாவது மனு ஜின்களால் வணங்கப்படும் ஒன்று அது வணக்கத்திற்கு தகுதி பெற்றது தானா? அல்லது அதற்குத் தகுதி பெறாததாஎன்பதை அறிந்து, உண்மையில் எவன் வணங்கப்பட வேண்டுமோ அவனை வணங்குவதற்காகவே படைக்கப்பட்டுள்ளன என்பது அதற்கான விளக்கமாகும்.

வணங்கப்படுவதற்குப் பொருத்தமான இலாஹ் ஒருவனே

إنما إله واحد. وإلهكم إله واحد. إنما الله إله واحد. وما من إله إلا إله واحد. قل إنما هو إله واحد. إنما إلهكم إله واحد.

இது போல இன்னும் எத்தனையோ வசனங்கள் அல்-குர்ஆனில் பாதிவாகியுள்ளது. அல்லாஹ் ஒருவனே இலாஹ் என்றே அவை அனைத்தின் அர்த்தங்களாகும்.

யார் முஷ்ரிக்?

المشرك الذي عبد مع الله إلها غيره

அல்லாஹ்வுடன் மற்றுமென்றையும் வணங்குபவன் முஷ்ரிக்காகும் என ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.” (புகாரி)

ஹழ்ரத் ஆதம் அவர்களுடைய காலத்தில் ஹாபீலைக் கொலை செய்யும் காலம்வரை எல்லா ஜனங்களும் ஒரு மதத்தினராக இருந்தார்கள். அப்புறம் ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் பிரளயமேற்பட்டதற்குப் பிறகு ஒரே சன்மார்க்கர்களாக அனைவரும் இருந்தார்கள். அப்புறம் அவர்கள் முஃமின் காபிர் என இரு வகையாகப் பிரிந்தனர். இனி உலகம் முடியும் தருவாயில் ஹழ்ரத் ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீண்டும் வந்த பிறகு ஒரே வர்க்கத்தினராவார்கள். இதற்கிடையிலுள்ள மத்திய காலத்தில் அவர்கள் பல சமூகத்தாராகவே இருந்து வருவார்கள்.
தொடரும்....

திங்கள், 24 ஜூன், 2019

கலிமாவின் திருடர்கள்.


கலிமாவின் திருடர்கள்.




மனித இனம் வாழுகின்ற பூமி, சுவாசிக்கின்ற காற்று, அருந்துகின்ற தண்ணீர் உட்பட அனைத்தும் மாசடைந்துவிட்டதொரு உலகத்தில்தான் நாம் இப்பொழுது பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இதனால் மனித இனத்தின் சரீரம் மட்டுல்லாமல் உள்ளமும் பாதிப்படைந்துள்ளது. எனவே மாசடையாத கலக்கமில்லாத சுத்தத் தூய்மையான கொள்கைக்கோட்பாட்டினை உருவாக்கும் முயற்சியில் வெளிவரும் தற்கால நவீன கருத்துக்கள் மாசடைந்த அசுத்தமான விளக்கங்களாகவே அது  இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆகவே தூய்மையானவர்கள், தெளிவானவர்கள், கலப்படம் இல்லாதவர்கள், சிறந்தவர்கள், அல்லாஹ்வுக்கு நெருங்கியவர்கள் நமக்கு காண்பித்துச் சென்ற வழியில் இருந்து நாம் சறுக்கிச் சென்று, வழிகேட்டில் வீழ்ந்து விடாதிருக்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவும் கடமைப்பட்டுள்ளோம்.

மேலும், முழு மனித இனமும் தீனுல் இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்டு நேர்வழி பெற்றிருக்கவேண்டும் என்ற இராதத் - நாட்டம் அல்லாஹ்வின் தீர்மானத்தில் இல்லாதிருக்கும் போது முழு இஸ்லாமியர்களும் ஒரே கருத்தின் கீழ் ஒன்றுபடவேண்டும் என்று எவ்வாறு எம்மால் கனவு காண முடியும்?.

கருத்து முரண்பாடு மனித இனத்தில் தவிர்க்க முடியாததொன்று. அது மனித இனத்தின் உடன்பிறவாச் சகோதரன். எனவே குழுக்களுக்கிடையில் கருத்துப் பரிமாறல்கள் நிகழ்கின்றபோது உரையாடல்களுக்கென்று இருக்கின்ற ஒழுங்குகளை பண்புகளை பேணிப்பாதுகாக்க பழகிக்கொள்ள வேண்டும். அது தவறிப்போய் விடுவதும் உண்டு.

அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் என்ற அடையாளத்தில் சில இலத்திரனியல் ஊடகங்களில் இடம்பெறும் சன்மார்க்க நிகழ்வுகள் எமக்கு மன வேதனையைத் தருகின்றன. பக்குவப்படாத சிறுவர்கள் சிலரின் சீற்றங்களால் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் என்ற மாபெரும் கோபுரம்  தூசிபடியத் துவங்கியிருப்பது துக்கமளிக்கிறது.

மனித இனத்தின் உருவம், நிறம், நாடு, மொழி வித்தியாசப்பட்டிருப்பதுபோன்று அதன் ஆய்வு, சிந்தனை, தேடல் போன்றதும் நிச்சயம் வித்தியாசப்பட்டே காணப்படும்.  எனவே ஒரு குழுமத்தின் சிந்தனைகள் மறு குழுமத்திற்கு மாறு பட்டதாகத் தென்படுவதில்  ஆச்சரியம் ஒன்றும் இல்லையே. அதற்காக எந்தவொரு குழுமமும் பிற குழுமத்தவரை காபிர், முஷ்ரிக் என்று தீர்ப்பு வழங்கிவிடுவது சிறந்ததொரு ஆரோக்கியமான முடிவாக அது இருக்கமாட்டாது. அவ்வாறு தீர்ப்பு வழங்குபவர்களை நம்மால் எவ்வாறு முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த முடியாதோ, அவ்வாறே  நமக்கும் ஏதாவதொரு தீர்ப்பினை அவர்கள் வழங்கிவிடமாட்டார்கள் என்பதற்கும் நம்மிடம் எந்த உத்தரவாதமும் இல்லை.
அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் என்ற குழுமத்தினைத் தவிர்த்து ஏனைய எல்லாக் குழுமங்களும் நரகம் செல்லும்  என்ற நபி மொழியை நன்கு மனனம் செய்து வைத்துள்ள இஸ்லாமிய சமூகம், நரகம் செல்லப் போகின்ற மீதமுள்ள 72 கூட்டங்களும் நிரந்தரமாகவே நரகத்தில் இருக்கப்போவதில்லை என்பதையும்,
எல்லா பித்அத்களும் வழிகேடு.  எல்லா வழிகேடும் நரகம் செல்லும்  என்ற நபி மொழியும் நொடிப்பொழுது தவறாமல் இஸ்லாமிய சமூகத்தின் நாவுகளில் உச்சரிக்கப்படும் அதேநேரம், நரகம் செல்லவிருக்கும் வழிகேட்டுக்காரர்கள் அந்த நரகத்தில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கப்போவதில்லை என்பதையும் மறந்துவிட்டு வாதப்பிரதிவாதங்களில் குதித்திருப்பது அல்லாஹ்வின் தீர்மானத்தில் உள்ள ஒன்றாகவே பார்க்கவேண்டியுள்ளது.

அருமையான சகோதரர்களே!



லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறிய ஒருவர் திருடினாலும் விபச்சாரம் செய்தாலும் அவர் சுவனம் செல்வார் என்ற பொன்மொழியினை சற்று தூர நோக்குடன் சிந்தித்துப்பாருங்கள்.
திருடுதல் என்பது சொத்துக்களுக்கு மட்டும் சொந்தமான ஒன்றல்ல. சுகங்களை திருடுபவர்கள் இருக்கிறார்கள். சொற்களைத் திருடுபவர்கள் இருக்கிறார்கள். சொற்களில் உள்ள கருத்துக்களை கொள்ளையடிப்பவர்களும் இருக்கிறார்கள். வணக்கங்களில் திருட்டு இருக்கிறது. கதை திருடப்படுகிறது. கற்பனை திருடப்படுகிறது. இதனடிப்படையில் வார்த்தைகளில் உள்ள யதார்த்தங்களை மூடி மறைப்பதையும் திருடுதல் என்று கூற முடியும்
அவ்வாறே விபச்சாரம் என்பது பெண்ணோடு மட்டும் தொடர்புடைய ஒன்றல்ல. பார்வையில் விபச்சாரம் இருக்கிறது. அது பெண்ணைப் பார்ப்பதில் மட்டும் அடங்கிவிடாது. எனவே  லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தைக்கான விளக்கங்களில் திருடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதைத் தவறான கண்ணோட்டத்தில் பார்பதற்கும் சந்தர்பம் இருக்கிறது. அவ்வாறு அதில் கூட திருடி, விபச்சாரம் செய்தாலும் அந்தக் கலிமாவை மொழிந்தவர், ஏற்றுக்கொண்டவர், சொன்னவர் சுவனம் செல்ல இருக்கிறார் என்ற கருத்தையும் மேற்கூறிய பொன்மொழி தாங்கி நிற்கிறது.

அல்லாஹ் அவன் நாடியோரைத் தண்டிக்காமல் குற்றம் செய்தவர்களை மன்னிக்கவும், அவன் நாடியோரைத் தண்டித்துவிட்டு மன்னிப்பு வழங்குவதற்கும் அல்லாஹ் சக்தி பெற்றவனாக இருக்கிறான். எனவேதான் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற திருக் கலிமாவை ஏற்றுக்கொள்ளும் பாக்கியம் அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட எவரையும் காபிர், முஷ்ரிக் என்று கூறவேண்டாம் என்று சொல்கின்றோம்.
நமது முன்னோர்கள் புறக்கணித்ததொரு  கருத்தினை அல்லது அவர்கள் மும்மொழியாததொரு விளக்கத்தினை நமது உறவுகள் அல்லாஹ்வின் அஸ்மாஉ ஸிபாத்துக்களில் கூற முற்படுபவர்களாக  இருந்தால் அவர்களை நாம் கலிமாவின் திருடர்கள் என்று சொல்வோம்.
லாயிலாஹ இல்லல்லாஹ்  வெனும் திருக்கலிமாவில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவது போன்று அந்தக் கலிமாவின் போதகரும் அகிலங்களின் அருட்கொடையுமான முஹம்மதுர் ரசூலுல்லாஹ் விலும் திருட்டுச் சம்பவங்கள் இடம்பிடித்துள்ளன. அகிலங்களின் அழிவுவரை இது இடம் பெற்றுக் கொண்டே  இருக்கும். இதனை தடுத்து நிறுத்தும் சக்தி மனிதனுக்குக் கிடையாது.
திருட்டுக் குற்றம் சாட்டப் பட்டு கைதியாகி சிறையில் வாழும் ஒருவருடன் அங்கு கடமையாற்றும் சிறைக் காவலாளிகள் அந்தக் கைதிகளுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றதொரு வரையறை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது. சிறைப்பிடிக்கப்பட்ட குற்றவாளிகள் சிறையில் இருந்து வெளிப்படும்போது சிறந்ததொரு பிரஜையாகவே வெளிச்செல்வதற்கான கட்டமைப்புக்கள் அங்கு வகுக்கப்பட்டிருக்கின்றன. தேவையற்ற முறையில் அவர்களை துன்புறுத்துவதற்கு சட்டத்தில் இடமில்லை என்பதைப் புரிந்துகொண்டு, கலிமாவின் திருடர்களுடன் நமது அழகிய பண்பாடுகளை வெளிப்படுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.


எழுபத்தி மூன்று கூட்டத்தில் 72 கூட்டத்தினர் லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ரசூலுல்லாஹ் வின் திருடர்களாகவே இருக்கிறார்கள்.  திருடியதற்காக அவர்கள் தண்டிக்கப்பட இருக்கிறார்கள். அந்த கைதிகளுக்கும் நிச்சயம் விடிவு காத்திருக்கிறது. திருடர்களும் மனிதர்கள்தான் என்று சிறை வாசலில் எழுதப்பட்டிருப்பதுபோன்று திருக்கலிமாவின் திருடர்களும் முஸ்லீம்கள்தான் என்று மனதில் எழுதி வையுங்கள்.
அண்மைக்காலமாக WHATSAPP எனும் இலத்திரனியல் ஊடகத்தில், பரம்பரை அஹ்லுஸ் சுன்னத்வல்ஜமாத் சகோதர்களுக்கும் பிற நவீன அமைப்புக்களுக்கும் இடையில் சூடான வாக்குவாதங்கள், குதர்க்ங்கள் இடம்பெறுவதை பார்வையாளர்களில் ஒருவராக  கண்காணித்து வரும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
பரம்பரை அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறிக்கொள்கின்ற சகோதரர்களிடம், அஹ்லுஸ் சுன்னத்வல்ஜமாஅத் என்றால் அதற்கு என்ன வரைவிலக்கணம்? நீங்கள் இந்த சமூகத்திற்காக என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? உரையாடல்களில் கூட  உங்களிடம் நபி வழி ஏதாவது இருக்கின்றதா? கத்தம், பாத்திஹா, மௌலித் கந்தூரி என்று கூறிக் கொண்டு  உண்டு வயிறு வளர்பது ஒன்றுதான்  உங்கள் வாடிக்கையாகிப் போய்விட்டது என்று கூறி அவர்களுடைய வணக்க வழிபாடுகளுடன் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் சகோதர்களின் வணக்க வழிபாடுகளை ஒப்பிட்டுப்பார்த்து கேலி, கிண்டல், பரிகாசம் செய்வதைக் காண முடிந்தது.
பரம்பரை அஹ்லுஸ் சுன்னத்வல்ஜமாஅத் சகோதரர்களைப் பார்த்து கிண்டலாக, கேலியாக, பரிகாசமாக அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் என்றால் யார்??? என்ற கேள்வி, அவ்வளவு சாதாரண கேள்வி என்று நினைத்துவிடாதீர்கள். நம்மைப் பார்த்து இவ்வாறு பரிகாசம் செய்பவர்கள் கலிமாவின் திருடர்கள். அந்தப் பரிகாசம் அவர்கள் திருட்டுத்தனத்தைக் கண்டுபிடிக்க அவர்களை அறியாமல் அவர்கள் விட்டுச் சென்ற அடையளாம். இது எப்படி? இதற்கான ஆதாரம்  என்ன என்று கேட்கின்றீர்களா?
உங்களில் ஒரு கூட்டம் வெளியாகும். அவர்களுடைய தொழுகைக்கு முன்னால் உங்களுடைய தொழுகையும் அவர்களின் நோன்புக்கு முன்னால் உங்களின் நோன்பும் அவர்களின் வணக்கத்துக்கு முன்னால் உங்களின் வணக்கமும் உங்களுக்குத் துச்சமாகத் தென்படும். இன்னும் அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். அது அவர்களின் தொண்டைக் குழிக்குக் கீழே இறங்காது.  வில்லில் இருந்து அம்பு பாய்ந்து செல்வதைப் போன்று அவர்கள் மார்கத்தில் இருந்து வெளியேறி விடுவார்கள்என்று மறைவான ஞானங்கள் வழங்கப்பட்ட அல்லாஹ்வின் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் அமுதவாக்கு இதற்கான ஆதாரமாகும்.

அல்லாஹ், ரசூலுடைய உயர் பதவிக்கு ஆபத்து இருப்பதாக சமிக்கை வெளியாகுமாக இருந்தால் அதனைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால் நீங்கள் கலிமாவின் திருடர்கள் என்ற அடையாளம் அழிக்கப்படாதவர்களாக மீண்டும் எழுப்பப் படுவீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

எனவேதான் பரம்பரை அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் உலமாக்கள், முஹிப்பீன்களின் வணக்க வழிபாடுகளை, செயல் வடிவங்களை,  சமூக சமய மேன்பாட்டு திட்டங்களை துச்சமாகக் கருதி கேலி, கிண்டல், பரிகாசம் செய்பவர்கள், கலிமாவின் திருடர்கள் என்று சொல்ல வருகின்றோம்.

திருடர்களை, விபச்சாரிகளை திருடர்கள் என்றும் விபச்சாரிகள் என்றும் அவர்களைப் பார்த்துச் சொல்லும் அதிகாரம் எல்லோருக்கும் இல்லை. அதிகாரிகளுக்கு மட்டுமே அது சொந்தமானது. நீதிபதி சொன்னார் என்பதற்காக நாமும் சொல்ல முடியாது. இவ்வாறே இவர் வழிகேடர், இவர் காபிர், இவர் முஷ்ரிக் என்று யாராவது ஒருவர் இன்னுமொருவரைப் பார்த்துக் கூறியிருந்தால் அவர் சொன்னார் என்பதற்காக நாமும் சொல்ல முயற்சிக்கக் கூடாது. வலிமார்கள் மேற் கொண்ட பணிக்கும் நாம் மேற்கொள்ளும் பணிக்கும் இடையில் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன. எனவே நமது கருத்துக்களை ஆரோக்கியமாகவும் ஆணித்தரமாகவும் அரங்கேற்ற அல்லாஹ், அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு  வஆலிஹி வசல்லம் அவர்களின் கிருபையால் அருள்பாலிப்பானாக.
தொடரும்…………


கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...