திங்கள், 8 ஜூலை, 2019

நபி வழியைப் பின்பற்றுங்கள்.


நபி வழியைப் பின்பற்றுங்கள்.



மக்காவினை மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நேசித்திருக்கின்றார்கள். எனவே ஈமானுள்ள ஒவ்வொருவரும் மக்காவினை நேசிக்க கடமைப்பட்டுள்ளனர். எனினும் மக்காவைவிட மதீனாவை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அதிகம் நேசித்திருக்கின்றார்கள். எனவே நாமும் அவ்வாறே நேசிக்க கடமைப்பட்டுள்ளோம்.

நபியுல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மக்காவுக்காக பிரார்த்தனை புரிந்ததைவிட இரு மடங்கு மதீனாவுக்காக மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பிரார்த்தித்திருக்கின்றார்கள்.” (புகாரி, முஸ்லிம்)

யா அல்லாஹ்! மக்காவினை நேசிக்க வைத்ததைவிட அதிகம் மதீனாவை நேசிக்க வைப்பாயாகஎன்றும் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பிரார்த்தனை புரிந்திருக்கின்றார்கள். (புகாரி,முஸ்லிம்)

யா அல்லாஹ்! மக்காவிற்கு அருள் புரிந்ததைவிட இரு மடங்கு அதிகமாக மதீனாவுக்கு அருள் புரிவாயாகஎன்றும் எங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டியுள்ளார்கள். (புகாரி,முஸ்லிம்)

மக்கா, மதீனா ஆகிய இரு புண்ணிய பூமிகளில் மரணிப்போர் அச்சம் தீர்ந்தவராக மறுமையில் எழுப்பப்படுவார்.” (தபரானி) என்று சொன்ன நாயகம் அவர்கள் இயலுமானவர்கள் மதீனாவில் மரணித்துக் கொள்ளுங்கள். அவ்வாறு மதீனாவில் மரணிப்பவருக்கு நான் ஷஃபாஅத்துச் செய்வேன்  என்று கூறி மதீனாவில் மரணிப்பதற்கு ஆர்வமூட்டியுள்ளார்கள். (அஹ்மத், திர்மிதி, இப்னு மாஜா, இப்னு ஹிப்பான், தபரானீ, பைஹகீ.)

மக்காவானது மதீனாவைவிட அதிகம் சிறப்பானதென்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மஸ்ஜிதுல் ஹராமானது மஸ்ஜிதுந் நபவியைவிடச் சிறப்பானதென்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. எனினும் அந்த சிறப்பு செம்மல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களால் அதற்கு வழங்கப்பட்டதே தவிர வேறில்லை என்ற காரணத்தினால், தற்பொழுது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் திருவுடலைச் சுமந்து கொண்டிருக்கும் மண்ணறையானது கஃபாவை விடச் சிறந்ததாகும். இல்லை இல்லை அது அர்ஷை விடச் சிறப்பானது. (அஷ்ஷிஃபா ஃபி தஃரீபீ ஹுகூகில் முஸ்தபா, வஃபாஉல் வஃபா ஃபி அக்பாரி தாரில் முஸ்தபா, அல் வஃபா, துர்ருல் முக்தார், மினஹுல் ஜலீல் ஷரஹ் முக்தஸரு கலீல், மதாலிபு உலிந் நுஹா)

ஒரு உண்மை விசவாசியின் மகத்துவம் உன்னுடைய மகத்துவத்தை விட மிகச் சிறப்பானது  (இப்னு மாஜா) என்று கஃபதுல்லாஹ்வைப் பார்த்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் பேசுகின்றார்கள் என்றால் அந்த கஃபாவை விட எங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் உயர்ந்தவர்கள் என்று கூறுவதில் என்ன தப்பு இருக்கப் போகின்றது?

இது (மக்கா) வானம் பூமி படைக்கப்பட்ட நாளிலிருந்து இறுதி நாள்வரை அல்லாஹ்வினால் பரிசுத்தமாக்கப்பட்ட புண்ணிய பூமியாகும். இது மனிதர்களினால் பரிசுத்தமாக்கப்பட்ட பூமி அல்ல. அப்படியிருந்தும் கூட இங்கு அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்காக மாத்திரம் சிறிது நேரம் அந்த புனிதம் நீக்கி வைக்கப்பட்டு இரத்தம் சிந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.” (புகாரி முஸ்லிம்.) இது இறைத் தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பிறப்பிற்காகப் படைக்கபட்ட பூமியாகும்.

அல்லாஹ்வின் தூதர் கோமான் நபிகளெம் பிரான் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் வானம் பூமி படைக்கப்படும் முன்பிருந்தே அல்லாஹ்வினால் பரிசுத்தமாக்கப்பட்டிருந்திருக்கின்றார்கள். அவர்களின் உண்மையான யதார்த்த நிலை மறுமையில்தான் புரியவரும். அதன் பின்னரும் அவர்கள் பரிசுத்தமானவர்கள்தான்.

அல்லாஹ்வின் ஆலயமான கஃபதுல்லாஹ்வினை அல்லாஹ்தான் புன்னிய பூமியாக ஆக்கி வைத்தானே தவிர மனிதர்களல்ல என்றுரைத்த அருமைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள், மக்காவினை நபியூல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்  புண்ணிய பூமியாக ஆக்கியதாகவும் அறிவித்திருப்பதைக் காண முடிகிறது. (முஸ்லிம்)

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களினூடாக மக்காவினை புண்ணிய பூமியாக அல்லாஹ் வெளிப்படுத்தி வைத்தான் என்ற கருத்தினை மேற்குறிப்பிட்ட நபி மொழி சுமந்து நிற்கிறது. இதனடிப்படையில்தான் நான் மதீனாவினை புண்ணிய பூமியாக்கி வைத்தேன்என்று அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அறிவித்த தகவலும் ஆகும்.

மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜினை விதியாக்கியுள்ளான். எனவே நீங்கள் ஹஜ் கடமையினை நிறைவேற்றுங்கள்என்று நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையின்போது பகர்ந்தார்கள். அப்போது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே ஒவ்வொரு ஆண்டுமா? என்று கேட்டார். அவர் இவ்வாறு மூன்று தடவை கேட்கும் வரை ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மௌனமாக இருந்துவிட்டு நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே கடமையாகி விடும். அதற்கு நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள் என்று விடை பகர்ந்தார்கள்.” (முஸ்லிம்)

சகோதர பெருமக்களே! இவ்வகிலங்களில் நிகழ்கின்ற நிகழ்வுகள் அனைத்திற்கும் சொந்தக்காரன் அல்லாஹ் ஒருவனே. சர்வ வல்லமையும் உள்ள அவன், அந்நிகழ்வுகள் அனைத்தினையும் தூதுவர்கள் என அழைக்கப்படும் நபிமார்கள், ரசூல்மார்கள், அமரர்க்ள் வாயிலாக அவற்றினை வெளிப்படுத்தி நிகழ்த்திக்  கொண்டிருக்கின்றான். தூதுவர்கள் அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்குமிடையிலான தொலைத் தொடர்பு சாதணங்கள்.

எனவே தூதுவர்களுக்கெல்லாம் தலைவராகிய அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு எந்தவொரு சக்தியுமில்லை என்று எண்ணி அவர்களை தூரத்தில் வைத்துவிட்டு அல்லாஹ்வினை நெருங்க முடியாதென்ற இதயசுத்தி எனும் பலமான உள்ளம் சார்ந்த பயணப் பொதிகளுடன் தூய அஹ்லுஸ் ஸஷுன்னத் வல்ஜமாஅத் அகீதாவென்னும் அச்சம் தீர்ந்த சீரிய பாதையில் பயணித்து ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள். இதுவே ஹஜ் கடமையினை நிறைவேற்ற விருப்பம் கொள்ளும் ஒருவரிடம் இருக்கவேண்டிய யதார்த்தமான சக்தியாகும்.

பொருளீட்டலில் ஹராம் ஹலாலைப் பேண முடியாத அபாயகரமான கால கட்டத்தினை நாம் கடந்து சென்று கொண்டிருப்பது போன்று அகீதாவிலும் சரி பிழை கண்டு கொள்ள முடியாததொரு இக்கட்டான காலத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். எனவே மதீனா பற்றிப் பேசும் மக்களை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மதீனத்து ஆலிம் ஆலிம்களிற் சிறந்தவர், பாம்பு தன் பாதுகாப்பிற்காக அதன் பொதும்பில் நுழைவது போன்று ஈமானின் பாதுகாப்பு மதீனாவில் தங்கியிருக்கிறதென்பதை மறந்துவிடாதீர்கள்.
 
புன்னிய பூமிகளுக்கு செல்கின்ற மக்களே! மக்கா மற்றும் மதீனா எல்லைகளில் மிக்க மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள். அப்பிரதேசங்களிலுள்ள முள்ளு மரங்களைக்கூட பிடுங்கிவிடக்கூடாதென்று இஸ்லாம் வலியுறுத்திக் கொண்டிருக்கும் போது மரண தறுவாயிலும் உம்மதீ, உம்மதீ என்ற கவலையுடன் வாழ்ந்து வந்த வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள்  சிந்தனையை உள்ளத்தில் இருந்து பிடுங்கி எறிந்து விட்டு எப்படி அப்பிரதேசங்களில் காலடி வைத்து ஹஜ் கடமையை நிறைவேற்றப் போகின்றீர்கள்?.

மறுமையில் நமக்காகப் பரிந்துரை செய்து நம்மைப் பாதுகாத்து நமக்கு அபயமளிக்கும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் எண்ணத்தினை உள்ளங்களில் இருந்து பிடுங்கி யெறிந்து, கண்ணிமை போல் காக்கவேண்டிய அவர்களின் பிறந்த புண்ணிய இல்லம் பொற் பாதங்களின் சுவடுகள் பதிந்த சுவனத்துப் பாதைகளை பாழடித்து இடித்து தரைமட்டமாக்கிவிட்டு, திரும்பும் இடமெல்லாம் நவீன கட்டிடங்கைள வடிவமைத்து அதன் வெளி அழகு கவர்ச்சிகளில் மக்களை மதிமயக்கி கொடுங்கோல் ஆட்சி புரியப்பட்டுக் கொண்டிருக்கும் நாட்டினூடாக தூவப்படுகின்ற நச்சு விதைகளுக்கு தரகர்களாகப் பணி புரியும் தறுதலைகளின் தலைமைத்துவத்தில் ஹஜ் மற்றும் உம்ராப் பயணம் மேற்கொள்வதில் இருந்தும் உங்ளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றிட மக்கா முகர்ரமா சென்று வரும் தற்கால ஹாஜிகளுக்கு உடலில் சக்தியிருக்கிறது. பயண வழி அச்சமற்ற தாக இருக்கிறது. வெளிவாரியான பாவச் செயல்களில் இருந்து முடிந்தவரை தங்களைப் பாதுகாத்துக்கொள்கின்றனர். ஆனாலும் உள்ளத்தில் சக்தி இல்லை. உள்வாரியான பயண வழி அசுத்தமடைந்திருக்கிறது.

உள்ளம் பாவங்களில் மூழ்கிப்போய் உள்ளது. வெளி வேசம் வெளிச்சமாக,கட்சிதமாக, கவர்ச்சிமிக்கதாக இருக்கிறது. உள்வேசமோ ஊத்தை நிறைந்து ஊனமுற்றிருக்கிறது. இதனால் அவர்களின் ஹஜ் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் என்ற அந்தஸ்த்தைவிட்டும் வெகு தூரம் சென்றுவிட்டது.

நாடு, மொழி, இனம், நிறம்,கோத்திரம், செல்வம், செல்வாக்கு ஆகிய அனைத்து வேறுபாடுகளையும் களைந்து உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வுடன் ஒரே கொள்கையுடன் கூடும் உலக மகா நாடு ஹஜ்.

வேற்றுமைளை மறந்து ஒற்றுமையைப் பறை சாற்ற வேண்டிய புனித மிக்க ஆலயத்தில் திட்டமிடப்பட்ட சதியின் அடிப்படையில் வேறுபட்டு நிற்கும் கொடுமையைக் காண்கின்றோம்.

இயக்கங்களின் பெயரால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பதைக் காண முடிகின்றது. இது 1925ஆம் வருடத்திற்குப் பின்னர் உருவான அவல நிலையாகும்.  இதற்கு அடித்தளமிட்டு துணை நிற்பவர்கள் யூத நஸாராக்களாகும். இவர்களினால் அஹ்லுஸ் ஸஷுன்னத் வல்ஜமாஅத்தினர் சொல்லொண்ணாத் துன்ப துயரங்களை சந்திக்கின்றனர்.

لا يثبت أحد على لأوائها وجهدها إلا كنت له شفيعا او شهيدا يوم القيمة

மதீனாவில் தொல்லைகளுக்கும் துன்ப துயரங்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டு பொறுமையுடன் அங்கு தரிப்பவருக்கு நான் மறுமையில் மன்றாடுவேன்என்ற மன்னர் மஹ்மூதரசர்ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தகவல் ஒன்றுதான் இச்சந்தர்ப்பத்தில் நமக்கு மன ஆறுதலைத் தருகின்றது.
தொடரும்...

ஞாயிறு, 7 ஜூலை, 2019

உள்ளம் செத்தவர்களைப் பின்பற்ற வேண்டாம்,


உள்ளம் செத்தவர்களைப் பின்பற்ற வேண்டாம்.



ولا تطع من أغفلنا قلبه

யாருடைய இருதயங்களை நாம் இருட்டாக்கி வைத்து விட்டோமோ அவர்களை நீங்கள் பின்பற்ற வேண்டாம்.” (அல்குர்ஆன் )

எனவே இதயம் இருண்டவர்களைப் பின்பற்றாதீர்கள். பொருளீட்டளில் சந்தேகம் உள்ளவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளாதீர்கள். மாறாக அல்லாஹ்வும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களும் எவர்களையெல்லாம் இதய சுத்தியுள்ளவர்கள் என்று புகழ்ந்து பாராட்டினார்களோ அவர்களை வழிப்படுங்கள்.

எனது சொத்துக்களில் ஒரு சதமும் சந்தேகத்திற்கிடமானவை இல்லையென்று உத்தரவாதமளித்த உத்தமப் பெருமக்களான உண்மைக்குண்மையான இமாம்கள், சூபியாக்களுடன் சகவாசம் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களையும் அவர்கள் வழி வந்தோரையும் பின்பற்றுங்கள். அவ்வாறானவர்களின் அறிவுரைகளைத்தான் அடியேன் இப்பிரதியில் பதித்துள்ளேன்.

கிராமங்களுக்கெல்லாம் அன்னை.


அல்லாஹ்வின் இல்லமான புனித கஃபா பூமியின் மையப்பகுதியில் அமைந்திருப்பதை இன்றைய நவீன அறிவியல் ஏற்றுக் கொண்டிருக்கிறது. உம்முல் குரா கிராமங்களுக்கெல்லாம் அன்னை என்று அல்குர்ஆன் மக்காவுக்குப் பெயர் சூட்டியுள்ளது. இது பூமியின் அடித்தளமாகும். இங்கிருந்தான் பூமி துவக்கம் பெற்றதென்று இமாம் ராஸீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.  இது பூமியின் முதல் தளமாகும். கடலினால் சூழப்பட்டிருந்த இந்த பூமி மக்காவில் இருந்துதான் வெளிப்படத் துவங்கியுள்ளது.


دحيت الأرض من مكة وأول من طاف بالبيت الملائكة

மக்காவில் இருந்து பூமி வெளிப்படுத்தப்பட்டது. அல்லாஹ்வின் இவ்வில்லத்தினை அமரர்கள் முதன் முதலில் தவாஃப் செய்தார்கள்என்று தூய நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள். (தப்சீர் இப்னு அபீ ஹாத்திம், தப்சீர் தபரீ, அக்பாறு மக்கா)

நிச்சயமாக மனிதர்களுக்கு முதன்மையாக வைக்கப்பெற்ற ஆலயம் மக்காவில் இருப்பதுதான். அது பாக்கியமுடையதாகவும் உலகத்தாருக்கு நேர் வழிகாட்டியாகவும் இருக்கிறது.” (அல் பகரா 95)

புனித மிகு ஆலயமான கஃபாவினை மனிதர்களுக்கு முன் அமரர்கள் தவாஃப் செய்துள்ளனர். இதற்குப்பின் மனிதர்களில் முதன் முதலில் தவாஃப் செய்ய அடித்தளமிட்டவர் முதல் மனிதர்  ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும். நபியுல்லாஹ் நூஹ் அலைஹிஸ்லாம் அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் முற்றிலும் சிதைந்து போன இந்த ஆலயத்தினை மீண்டும் நபியுல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் புனரமைத்தார்கள்.

இந்த ஆலயத்தினை சகல நபிமார்களும் தரிசித்துள்ளனர். இதில் பல நபிமார்களின் அடக்கஸ்தலங்களும் இருக்கின்றன. எனினும் இம்மண்ணில் எங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைத் தவிர வேறு எந்த நபியும் பிறக்கவும் இல்லை. இங்கிருந்து நேர் வழிக்கான அழைப்பிதனை சமூகத்திற்கு வேறெவரும் விடுக்கவும் இல்லை. எனவே இதில் பாக்கியமும் நேர் வழியும் இருப்பதாக அண்ணலார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களையே இப்பூமி அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அகிலங்களின் அடிப்படை.


புனித மக்கா முகர்ரமாவினை உம்முல் குரா கிராமங்களுக்கெல்லாம் அன்னை என்று அல்குர்ஆன் சொன்னதுபோல் அண்ணல் நபி முஜ்தபா ஸல் லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை உம்மு நபிஎன்று சொல்வதையும், அவ்வாறே அண்ணலவர்களுக்கு வழங்கப்பட்ட வேதத்தின் முழுத் தத்துவங்களையும் உள்ளடக்கிய சூரத்துல் ஃபாத்திஹாவினையும் உம்முல் குர்ஆன்என்று அதற்குப் பெயர் சூட்டப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.

எனவே மக்கமா நகர்  பூமிகளுக்கு அடித்தளமாகவும் சூரத்துல் பாத்திஹா அல்குர் ஆனுக்கு அடித்தளமாகவும் இருப்பது போன்று மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நபிமார்களுக்கெல்லாம் அடித்தளமாக இருக்கின்றார்கள். இல்லையில்லை அகிலங்களுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கின்றார்கள்.

அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களில் இருந்தும்தான் அகிலங்களெல்லாம் அகண்டு விரிந்து சென்ற தென்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் தேவை இருக்கிறது. உடலும் உள்ளமும் ஊனமுற்று உலா வருகின்றவர்களுக்கு இவ்வுண்மை எவ்வாறு புரியப்போகின்றது?.

மனிதர்களுக்கு முதன்மைப்படுத்தப்பட்ட ஆலயமாக கஃபா இருப்பதுபோன்று அந்த கஃபாவினை முன்னோக்கி அல்லாஹ்வினை வணங்கிடும் முதன்மை மனிதராக மன்னர்முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை அடையாளப்படுத்தி வைத்தனூடாக அகிலங்களுக் கெல்லாம் முதன்மையானவராக ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் படைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற தகவலினை அல்லாஹ் அறிவித்துக் கொண்டிருக்கின்றான் என்பதை அகம் தெளிந்தவர்கள் அறிவார்கள்.

பாக்கியமும் உலகத்தாருக்கான நேர்வழியும் கஃபாவில் இருக்கின்றதென்றால் அந்த பாக்கியமும் நேர் வழியும் நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களினூடாகத்தான் வெளிப்படுத்தப்பட்டது. உம்முல் குராவில் உம்மு நபி உதயமான பின்னர்தான் அதன் உயர்வு வானளாவ உயர்ந்தும் போனது.

அல்அமீனான அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மக்காவில் உதயமாக இருக்கின்றார்கள் என்பதற்காகவே அது பலதுல் அமீனாகஅறிமுகப்படுத்தப்பட்டது.


தொடரும்.....

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...