எழுபத்தெட்டாவது அத்தியாயம்
சூரத்துந் நபஇ (அந்தச் செய்தி)
ருகூஉகள் 2 தர்தீபுத் திலாவதி 78 தர்த்தீபுந் நுஸூலி 80
بسم الله الرحمن الرحيم
மிகவும் இரக்கமுள்ள, எப்போதும் கருணையுள்ள அல்லாஹ்வின் நாமத்தால் (இதனைத் துவங்குகின்றேன்(
عَمَّ يَتَسَاءَلُونَ
1. இவர்கள் (மக்கள்) ஒருவருக்கொருவர் எதைப் பற்றி, கேள்வி கேட்டுக் கொள்கின்றனர்.
عَنِ
النَّبَإِ الْعَظِيمِ
2. மிக முக்கிய ஒரு தகவல் விடயமாக(வல்ல)வா?
الَّذِي
هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
3. அது தொடர்பில் அவர்கள் (உண்மைக்குப் புறம்பான விதத்தில்) முரண்பாடான அபிப்பிராயம் கொண்டவர்களாக உள்ளார்களே அதைப் பற்றி.
كَلاَّ
سَيَعْلَمُونَ
4. அவ்வாறல்ல, (வெகு விரைவில் அந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை) அவர்கள் அறிந்திடுவார்கள்.
ثُمَّ
كَلاَّ سَيَعْلَمُونَ
5. பின்னரும் அவ்வாறல்ல, (கட்டாயம் வெகு) விரைவில் (தமது எண்ணம் தவறானது என்பதைத்) தெளிவாக அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
أَلَمْ
نَجْعَلِ الأَرْضَ مِهَادًا
6. (பிரமாண்டமான) இப்புவியை நாங்கள் (உங்களுக்கு சுகம் தரும்) தொட்டிலாக (தங்குமிடமாகவும் வாழ்வாதார இடமாகவும்) அமைக்கவில்லையா?
وَالْجِبَالَ
أَوْتَادًا
7. இன்னும் (இப்புவி ஆடாமலும் அசையாமலும் இருப்பதற்காக) மலைகளை முளைகளாகவும் (அமைக்கவில்லையா?)
وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا
8. மேலும், உங்களை (ஆண் - பெண்) இரு பாலாராக நாம் படைத்துள்ளோம்.
وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا
9. மேலும், உங்களது உறக்கத்தை (உங்கள் உடலுக்கு) ஓய்வாக அமைத்துள்ளோம்.
وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا
10. மேலும், இரவைத் திரையாக அமைத்துத் தந்துள்ளோம்.
وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا
11. மேலும், பகலை வாழ்(வாதாரத்திற்குத் தே)வை(யானவற்றை)த் தேடுவதற்கான நேரமாக ஆக்கியுள்ளோம்.
وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا
شِدَادًا
12. உங்களுக்கு மேலே (உள்ள) உறுதியான (வானங்கள்) ஏழையும் நாமே அமைத்தோம்.
وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا
13. இன்னும் (சூரியனை) நாம் அதிக பிரகாசம் அளிக்கும் விளக்காக அமைத்துள்ளோம்.
وَأَنزَلْنَا
مِنَ الْمُعْصِرَاتِ مَاء ثَجَّاجًا
14. கார் மேகங்களிலிருந்து பெரும் நீரை நாம் இறக்கி வைத்தோம்.
لِنُخْرِجَ
بِهِ حَبًّا وَنَبَاتًا
15. அதனூடாக தானியத்தையும், தாவரத்தையும் நாம்
வெளிப்படுத்துவதற்காக,
وَجَنَّاتٍ
أَلْفَافًا
16. அடர்ந்த (கிளைகளைக் கொண்ட) தோட்டங்களையும்
إِنَّ
يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا
17. நிச்சயமாக (இவர்கள் விவாதித்து பொய்ப்பித்துக் கொண்டிருக்கும்) தீர்ப்புக்குரிய அந்நாள், நேரம் குறிக்கப்பட்டதாக உள்ளது.
يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ
فَتَأْتُونَ أَفْوَاجًا
18. ஸூர் ஊதப்படும் அந்நாளில், திரள் திரளாக (திரண்டு) நீங்கள் வருவீர்கள்.
وَفُتِحَتِ
السَّمَاء فَكَانَتْ أَبْوَابًا
19. இன்னும், வானம் திறக்கப்பட்டு, அது பல வழிகளாக ஆகிவிடும்.
وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ
سَرَابًا
20. இன்னும் மலைகள் (இருந்த இடங்களை விட்டும்) நீக்கப்பட்டு, கானல் நீராகிப் போய்விடும்.
إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا
21. நிச்சயமாக நரகம், (இந்த அநியாயக்காரர்களின் வரவை) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
لِلطَّاغِينَ
مَآبًا
22. (அது சன்மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ள சட்டங்களை) அத்துமீறியவர்களுக்குரிய ஒதுங்கும் தலமாகும்.
لابِثِينَ فِيهَا أَحْقَابًا
23. அதில் அவர்கள் (முடிவில்லாமல்) பல யுகங்கள் தங்கியிருப்பார்கள்.
لّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلا
شَرَابًا
24. அதில் அவர்கள் (எந்தவொரு) குளிர்ச்சியையோ, பானத்தையோ சுவைக்க மாட்டார்கள்.
إِلاَّ
حَمِيمًا وَغَسَّاقًا
25. கடுமையாக கொதிக்கும் நீரையும், சீழ் சலத்தையும் தவிர.
جَزَاء
وِفَاقًا
26. (இது அவர்கள் செய்த அநியாயங்களுக்குப்) பொருத்தமான கூலியாக
إِنَّهُمْ
كَانُوا لا يَرْجُونَ حِسَابًا
27. திடனாக அவர்கள் (மரணத்தின் பின்னர் உள்ள) விசாரணையை ஏற்றுக் கொள்ளவே இல்லை.
وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا
28. இன்னும் நமது வசனங்களை (முற்றிலுமாகப்) பொய்ப்பித்த வண்ணமிருந்தனர்.
وَكُلَّ
شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا
29. இன்னும் சகல அம்சங்களையும் பதிவேட்டில் எழுதி பதிவு செய்துள்ளோம்.
فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلاَّ
عَذَابًا
30. ஆகவே, நீங்கள் அனுபவியுங்கள்; நாம் உங்களுக்கு தண்டனையைத் தவிர (வேறு எதனையும்) அதிகப்படுத்த மாட்டோம்.
إِنَّ
لِلْمُتَّقِينَ مَفَازًا
31. நிச்சயமாக இறை பயபக்தி உள்ளவர்களுக்கு விமோசனம் இருக்கிறது.
حَدَائِقَ وَأَعْنَابًا
32. (வாழ்வதற்கு) தோட்டங்களும், (உண்பதற்கு) திராட்சைப் பழங்களும் (இருக்கின்றன)
وَكَوَاعِبَ أَتْرَابًا
33. இன்னும் (மனைவிகளாக) ஒரே வயதுள்ள நெஞ்சு நிமிர்ந்த கன்னிப் பெண்களும் (இருக்கின்றனர்)
وَكَأْسًا
دِهَاقًا
34. (குடி பானங்கள்) நிரம்பிய பாத்திரமும் (இருக்கிறது)
لّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلا
كِذَّابًا
35. அங்கு அவர்கள் எவ்வித வீணானதையும் பொய்யையும் செவியுற மாட்டார்கள்.
جَزَاء
مِّن رَّبِّكَ عَطَاء حِسَابًا
36. (இவை யாவும் இறை பய பக்தியாளர்கள் செய்த நல்லமல்களுக்கு) உங்களது இறைவன் வழங்கும் பிரதி உபகாரமும் போதுமான வெகுமதியுமாகும்
رَبِّ السَّمَاوَاتِ وَالأَرْضِ
وَمَا بَيْنَهُمَا الرَّحْمَنِ لا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا
37. அவன்தான் வானங்கள், பூமி மற்றும் அவ்விரண்டுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் படைப்பாளன்; மிகவும் இரக்கமுள்ளவன். எனினும் (அந்நாளில் எவருமே அவன் முன்னிலையில் சுயமாகப்) பேசுவதற்கு ஆற்றல் பெற மாட்டார்கள்.
يَوْمَ يَقُومُ الرُّوحُ
وَالْمَلائِكَةُ صَفًّا لّا يَتَكَلَّمُونَ إِلاَّ مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَنُ
وَقَالَ صَوَابًا
38. (ஜிப்ரீல் எனும்) றூஹும், வானவர்களும் அணிவகுத்து நிற்கும் நாளில், எவருக்கு மிகவும் இரக்கமுள்ளவன் அனுமதி வழங்கினானோ அவர் (மாத்திரம்) பேசுவார். மேலும், அவர் (உலகில், கலிமா தய்யிபாவென்னும்) உண்மையை உரைத்தவராக இருப்பார்.
ذَلِكَ
الْيَوْمُ الْحَقُّ فَمَن شَاء اتَّخَذَ إِلَى رَبِّهِ مَآبًا
39. அது நிச்சயமான நாளாகும். ஆகவே, விரும்பியவர் தன் இறைவனிடம் புகலிடத்தை எடுத்துக்கொள்ளட்டும்.
إِنَّا
أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ
وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا
40. நிச்சயமாக நாம் அண்மையில் நிகழக்கூடிய ஒரு வேதனையைப் பற்றி உங்களுக்கு எச்சரித்து விட்டோம். அந்நாளில் மனிதன் தன் இரு கரங்கள் உழைத்த உழைப்பின் பலனைக் கண்டு கொள்வான். நிராகரிப்பவனோ, ‘நான் மண்ணாக ஆகியிருக்க வேண்டுமே’ என்று கூறுவான்.
குறிப்பு : வசனம் 07
وَالْجِبَالَ
أَوْتَادًا
இன்னும் (இப்புவி ஆடாமலும் அசையாமலும் இருப்பதற்காக) மலைகளை முளைகளாகவும் (அமைக்கவில்லையா?)
திருக்குர்ஆனில் பூமி மற்றும் வானங்கள் பற்றிப்
பேசப்படுகின்ற இடங்களில் மலைகள் குறித்தும் பேசப்படுகிறது. வானங்களும், பூமியும் இறைவனின் பிரமிப்பூட்டும் பிரம்மாண்ட
படைப்புகளாக இருப்பதைப் போன்றே மலைகளும் ஒரு மகத்தான படைப்பாகும் என்பதையே இது
காட்டுகின்றது.
பூமியில் அழகாகவும், கம்பீரமாகவும் காட்சி அளிக்கும் மலைகள் எதற்காகப்
படைக்கப்பட்டிருக்கின்றன? பூமியில் அதன்
அவசியம்தான் என்ன?
“நாம் பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? இன்னும் மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?”
(78:6) என்றும்,
“அவனே பூமியை விரித்து அதில் உறுதியான மலைகளையும் ஆறுகளையும் உண்டாக்கினான்” (13:3)
என்றும்,
“அவனே பூமியை விரித்தான்... அதில் மலைகளையும் நிலைநாட்டினான்” (79:30,32)
என்றும் இறைவன் திருமறையில் கூறுகின்றான்.
பூமி ஆடாமல் அசையாமல் நிற்பதற்கு மலைகள், ‘முளை’களாக அமைந்துள்ளன என்பதையும், அவை உறுதியானவை என்பதையும் மேற்கண்ட வசனங்கள் மூலம்
அறியலாம்.
கூடாரங்கள் காற்றில் பறந்து விடாமல்
தடுப்பதற்காக அதன் பக்கவாட்டில் உள்ள கயிறுகளை இழுத்துக் கட்டுவதற்காக பூமியில்
அறையப்படும் ‘முளைக்குச்சி’களைப் போல மலையின் வேர்கள் அமைந்துள்ளன.
‘புவி’ (ஏர்த்) என்ற தலைப்பில் எழுதப்பட்ட புத்தகம்
புவியியல் தொடர்பான அறிவியல் நூலாக போற்றப்படுகின்றது. இந்த நூலின் ஆசிரியர்களில்
ஒருவரும், அமெரிக்காவில் உள்ள
தேசிய விஞ்ஞானக் கழகத் தலைவருமான பிராங் பிரஸ் கூறுகையில், “மலைகள், முளைகளைப் போன்று பூமிக்கடியில் புதைந்து காணப்படுகின்றன.
அதன் வேர்கள் பூமிக்குள் மிக ஆழமாக ஊடுருவி நிற்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
பூமியின் மேற்பரப்பில் காணப்படும் மலைகளின் உயரத்தை விட 10 அல்லது 15 மடங்கு ஆழமாக பூமிக்கடியில் ‘மலை வேர்’ என்று அழைக்கப்படும்
அதன் வேர் பதிந்துள்ளது.
சான்றாக, பூமியின் மேற்பரப்பில் இருந்து 9 கிலோ மீட்டர் உயரமான இமயமலையின் வேர் பூமிக்கு
அடியில் சுமார் 125 கிலோ மீட்டர்
ஆழத்திற்கு நீண்டு காணப்படுகிறது.
இதன் காரணமாக கூடாரத்தைத் தாங்கிப் பிடித்துக்
கொண்டிருக்கும் முளைகள் போன்று மலைகள் செயல்படுகின்றன என்பதை விஞ்ஞான உலகம்
ஒப்புக் கொண்டுள்ளது.
வசனம் 38
يَوْمَ يَقُومُ الرُّوحُ
وَالْمَلائِكَةُ صَفًّا لّا يَتَكَلَّمُونَ إِلاَّ مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَنُ
وَقَالَ صَوَابًا
(ஜிப்ரீல் எனும்) றூஹும், வானவர்களும் அணிவகுத்து நிற்கும் நாளில், எவருக்கு மிகவும் இரக்கமுள்ளவன் அனுமதி வழங்கினானோ அவர் (மாத்திரம்) பேசுவார். மேலும், அவர் (உலகில், கலிமா தய்யிபாவென்னும்) உண்மையை உரைத்தவராக இருப்பார்.
இவ்வத்தியாயத்தின் முப்பத்தெட்டாம் வசனமான இவ்வசனம், மறுமை நாளில் மக்களுக்காக அல்லாஹ்வின் அனுமதியோடு அருமைத் தூதர் அல்லாஹ்வின் பேரருள் பெருமானார் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் பேசுவார்கள் என்ற கருத்தைப் போதித்துக் கொண்டிருக்கிறது. இதுவே “ஷஃபாஅத்துல் குப்ரா” என்று சொல்லப்படுகிறது.
“லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற உண்மையான வார்த்தையை மொழிந்து, அதன் பிரகாரம் செயல்பட்டவர்களில் யாருக்கெல்லாம் பரிந்துரை செய்வதற்கு அல்லாஹ் அனுமதி வழங்குவானோ அவர்களும் நாளைக் கியாமத்தில் அல்லாஹ்வோடு உரையாடுவார்கள். பிறருக்காகப் பரிந்துரை செய்வார்கள்.
இந்த உலகம் அழிக்கப்பட்டு மறுமை நாள் ஏற்படுத்தப்பட்டவுடன் மக்களெல்லாம்
அவரவர்களின் கப்றுகளிலிருந்து வேக, வேகமாக
வெளியேறுவார்கள். யாரும் யாருக்கும்
உதவி செய்ய முடியாத அந்த நாள், எனக்கு என்ன நடக்குமோ என்று அச்சம்
நிறைந்த பயங்கரமான அந்த மறுமை நாள். அந்த நாளில் சிலரால் பாவிகளுக்கு பரிந்துரை (ஷஃபாஅத்) மூலம் ஈடேற்றம் கிடைக்கும். இனி, பாவிகளுக்கு எந்த, எந்த அடிப்படையில் (ஷஃபாஅத்) பரிந்துரை கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
மலக்குமார்களின் ஷஃபாஅத்
மறுமை நாளில் அல்லாஹ்வின் விஷேட படைப்புகளான குறிப்பிட்ட மலக்குமார்களுக்கு ஷஃபாஅத் செய்யும் அனுமதியை அல்லாஹ் கொடுக்கின்றான். அந்த மலக்குகளின் ஷஃபாஅத்தின் மூலம் ஒரு தொகை பாவிகளுக்கு சுவனம் செல்லும் பாக்கியம் கிடைத்து விடும் என்னும் தகவலை பின்வரும் அல்குர்ஆனின் வசனம் உறுதிப்படுத்துகின்றது.
وَكَم مِّن مَّلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ
شَيْئًا إِلَّا مِن بَعْدِ أَن يَأْذَنَ اللَّهُ لِمَن يَشَاءُ وَيَرْضَىٰ
வானத்தில் எத்தனையோ வானவர்கள் உள்ளனர். அவர்களது பரிந்துரை
எந்தவொரு
பலனுமளிக்காது. எனினும், அல்லாஹ் விரும்பி, எவரைப் பொருந்திக் கொண்டு அவன் அனுமதி அளிக்கின்றானோ அவரைத் தவிர (அவரது பரிந்துரை பயனளிக்கும்). (சூரத்துந் நஜ்ம் வசனம் 26)
وَلا يَشْفَعُونَ إِلا لِمَنِ ارْتَضَى
அவன் விரும்பியவர்களுக்கன்றி
மற்றெவருக்கும்
இவர்கள்
பரிந்துரை
செய்ய
மாட்டார்கள். (சூரத்துல் அன்பியா வசனம் 28)
நல்லடியார்களின் ஷஃபாஅத்
அமரர்களுக்கு ஷஃபாஅத் – பரிந்துரை செய்வதற்கான அனுமதியை அல்லாஹ்
வழங்கி அவர்களை அல்லாஹ் சிறப்பித்தது போன்று, இந்த உலகில் அல்லாஹ்விற்கும், நபி நாயகம்
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்த
குறிப்பிட்ட நல்லடியார்களுக்கும் அந்த மறுமை நாளில் பாவிகளுக்காக வேண்டி ஷஃபாஅத்
செய்யும் அனுமதியை அல்லாஹ் கொடுக்கின்றான் என்பதை பின்வரும் குர்ஆன் வசனங்கள்
உறுதிப்படுத்துகின்றன.
مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ
அல்லாஹ்வுடைய அனுமதியின்றி அவனிடத்தில் யார்தான் பரிந்துரை பேச முடியும். (சூரத்துல் பகரா வசனம் 255)
فَمَا تَنفَعُهُمْ شَفَاعَةُ الشَّافِعِينَ
எனவே, (ஷஃபாஅத்) பரிந்துரை செய்பவர்களின் எந்த பரிந்துரையும் (நிராகரிப்பாளர்களான) அர்களுக்குப் பயனளிக்காது. (சூரத்துல் முத்தத்திர் வசனம் 48)
مَا لِلظَّالِمِينَ مِنْ حَمِيمٍ وَلا شَفِيعٍ يُطَاعُ
அநியாயம்
செய்பவர்களுக்கு
உதவி
செய்பவர்கள்
ஒருவரும்
இருக்க
மாட்டார்கள். அனுமதி பெற்ற பரிந்துரையாளர்களும்
இருக்க
மாட்டார்கள். (சூரத்துல் முஃமின் வசனம் 18)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி
வஸல்லம் அவர்களின் ஷஃபாஅத்
இணை வைக்காத நிலையில் மனிதன் என்ற அடிப்படையில் தவறுகள்,
குற்றங்கள் செய்த சகல பாவிகளுக்காகவும் நம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரை
கிடைத்து விடும். அல்ஹம்துலில்லாஹ் !
قال رسول الله صلى الله عليه وسلم
شفاعتي لأهل الكبائر من أمتي
“என்னுடைய “ஷஃபாஅத் குப்ரா” எனும் மாபெரும் பரிந்துரையானது, என்னுடைய உம்மத்தில்
பெரும்பாவம் செய்தவர்களுக்கு உண்டு” என நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி, அபூதாவுத், முஸ்னத் அஹ்மத், இப்னு மாஜா.)
அல்குர்ஆனின் ஷஃபாஅத்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள்: குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு
அது மறுமையில் (இறைவனிடம்) பரிந்துரை செய்யும்.
இரு ஒளிச்சுடர்களான “அல்பகரா” மற்றும் “ஆல இம்ரான்” ஆகிய இரு அத்தியாயங்களையும்
ஓதிவாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில்
நிழல்தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப்
போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும்.
“அல்பகரா” அத்தியாயத்தை ஓதிவாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள்
செயலிழந்துபோவார்கள். (நூல் முஸ்லிம்)
குழந்தைகளின் ஷஃபாஅத்
أيما امرأة مات لها ثلاثة من الولد كانوا حجابا من
النار قالت امرأة واثنان قال واثنان
ஹதீதின் சாரம்சம்: “பருவ வயதை அடையாத மூன்று அல்லது இரண்டு குழந்தைகளை ஒரு பெண்
பறிகொடுத்தால் அவளை நரகத்திலிருந்து காக்கும் திரையாக அக்குழந்தைகள் இருப்பார்கள்” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரி,முஸ்லிம்)
நாம் என்ன அமல் செய்திருந்தாலும் நாளை மறுமையில் நாயகம்
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் நம் அனைவருக்காகவும் அல்லாஹ்விடம்
பரிந்துரை செய்யாத வரை சுவனம் செல்லவும் முடியாது; நரகம் செல்லவும் முடியாது.
நாயகமே! யா ரசூலல்லாஹ்! எனக்குப் பரிந்துரை
செய்யுங்கள்
அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல் எவருமே மற்றொருவருக்காகப் பரிந்துரை செய்ய முடியாதென்பதில் மாற்றுக்
கருத்துக்கு இடமில்லை. வானவர்கள், நபிமார்கள், வலிமார்கள் போன்றவர்களுக்கு பரிந்துரை செய்வதற்கான அனுமதியை அல்லாஹ் வழங்கவுள்ளதாக அவன் வாக்களித்துள்ளான். அவ்வாறு வாக்களிப்பட்டவர்களின் பரிந்துரையை எமக்கும் வழங்குவாயாக என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியலாம். பரிந்துரை செய்வதற்குத் தகுதியானவர்களிடம் நேரடியாகவும் கேட்கலாம்.
عن أنس رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أن يشفع لي
يوم القيامة فقال أنا فاعل
ஹழ்ரத் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: நான், நபிகள் நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களிடம், மறுமை நாளில் எனக்குப் பரிந்துரை செய்யுமாறு வேண்டிக் கொண்டதற்கு, “நான் பரிந்துரை செய்வேன்” என்று கூறினார்கள். (நூல்: திர்மிதி)
அல்லாஹ்வின் பேரருளான பெருமானார் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகில் வாழும்போது தனக்காகப் பரிந்துரை செய்யுங்கள் என்று நபித் தோழர் ஹழ்ரத் ஸெய்யிதுனா அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நேரடியாகக் கேட்டுப் பெற்றுக் கொண்டதுபோல, நாயகமே “யா ரசூலல்லாஹ்! எனக்காகப் பரிந்துரை செய்யுங்கள்” என்று இப்பொழுதும் நாயகத்திடம் நேரடியாக நம்மால் கேட்க முடியுமா? அல்லது முடியாதா? என்றதொரு வினா முன்வைக்கப்பட்டால், “கேட்க முடியும்” என்றுதான் நாம் பதில் கூறுவோம்.
இப்னு தைமிய்யா என்ற ஒரு தனி நபர்தான் அவ்வாறு
கேட்க முடியாதென்ற கருத்தை முதன் முதலில் பிரசாரம் செய்து பிரச்சினையைத்
தோற்றுவித்தார். நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலக வெளித்தோற்ற வாழ்வை முடித்து கொண்டு மறுவுலக வாழ்வைத் துவங்கச்
சென்ற பின்னர் அவர்களிடம் நேரடியாக உதவி தேட முடியாதென்று இப்னு தைமிய்யா கூறினார்.
மேலும், நபிகள் நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி
வஸல்லம் அவர்களைச் சந்திக்கும் எண்ணத்தில் மாமதீனாவுக்குப் பயணம் செய்யக் கூடாதென்றும்
சொன்னார். இவை யாவும் வழிகேடு என்றார். வழி கேட்டில் உள்ளவர்களெல்லாம் நரகம் செல்வார்கள் என்றார். மேலும் இது போன்ற பல புதுப்புது ஃபத்வாக்களை அவர் வழங்கினார். அதனால், அவர் காலத்தில் வாழ்ந்த உலமாக்கள் அவரோடு நேரடி விவாதத்தில் கலந்து கொண்டு அவரின் கருத்துக்களை முறியடித்தனர்.
முடிவில் “அவரொரு வழிகேடர்” என்று தீர்ப்பளித்து சிறைப் பிடித்தனர். அந்த வகையில் ஹிஜ்ரி 728 ஆம் ஆண்டு எகிப்து நாட்டில் சிறையில் மரணமானார். இவரது மரணத்தோடு இவரால் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பொய்யான மார்க்க விளக்கங்களும் மண்ணுக்குள் புதையுண்டு மண்ணோடு மண்ணாகி மக்கிப் போயின.
இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்
இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு விரோதமான விஷக் கருத்துக்கள் அவரது உடலுடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்டு சுமார் 400 ஆண்டுகள் கழிந்த பின்னர் மீண்டும் கறைபடிந்த அந்தக் கருத்துக்களைத் தோண்டியெடுத்து புதிய வடிவத்தில் தூவியவர்தான் இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவராகும். இவர் ஹிஜ்ரி 1115 ல் பிறந்து 12௦6 ல் மரணமடைந்தார்.
இப்னு தைமிய்யா, வெளித் தோற்றத்தில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் குடிகொண்ட குடும்ப அங்கத்தினராக இருந்தும் கூட, அவரது பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள், ஆசிரியர்கள், ஷைகுமார்கள் கூறி வந்த விளக்கங்களுக்கு விரோதமான புது விளக்கங்களை வழங்கியது போன்றே, இப்னு அப்தில் வஹ்ஹாபும் கூறினார்.
“மக்காவில் நபிகள் நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஆலி வஸல்லம்
அவர்கள் பிறக்கும்போது முஷ்ரிக்கீன்கள், வேதக்காரர்கள் எவ்வாறு இருந்தார்களோ அதைவிட மோசமானதொரு நிலைப்பாட்டில் தன்னுடைய காலத்து மக்கள் வாழ்ந்து கொண்டிருந்ததாக இப்னு அப்தில் வஹ்ஹாப் கூறியுள்ளார்.” (நூல்: அத்துரருஸ் ஸனிய்யா ஃபில் அஜ்விபதின் நஜ்திய்யா)
அதாவது மக்கா முகர்ரமா, மதீனா முனவ்வரா போன்ற புனித நகரங்களில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள், இஸ்லாமிய அகீதா என்ற பெயரில் நபிமார்கள்,
வலிமார்களின் கப்றுகளை வணங்கி
வந்ததாக இப்னு அப்தில் வஹ்ஹாப் கூறியுள்ளார்.
இப்னு அப்தில் வஹ்ஹாப் வெளிப்படுத்திய பொய்யான போலியான கருத்துக்களுக்கு அவரது தந்தை,
சகோதர் உட்பட மக்கா முகர்ரமா மற்றும் மதீனா முனவ்வராவில் உள்ள ஏராளமான உலமாக்கள் மறுப்பும் எதிர்ப்பும் தெரிவித்தனர். ஆனாலும் அவர் அதில் வெற்றி கண்டார். காரணம், அவர் கருத்துக்கு யாரெல்லாம் எதிர்ப்புத் தெரிவித்தார்களோ அவர்களெல்லாம் பிரித்தானிய
கூலிப் படையின் உதவியோடு ஆண், பெண், சிறுவன், சிறுமி என்ற வித்தியாசம் பாராமல்
படுகொலை
செய்யப்பட்டனர்.
தாயின் மடியில் பால் அருந்தும் குழந்தைகள் என்றுகூடப்
பார்க்காமல் அக்குழந்தைகளை தாய்மார்களின் கண் முன்னே அறுத்தெறிந்தனர்.
உலமாக்கள், ஸூஃபியாக்கள் மற்றும் ஸாதாத்மார்கள்
என
சுமார்
70,000 பேர் புனித நகரப்பகுதிகளான மக்கா முகர்ரமா
மற்றும் மதீனா முனவ்வராவில் வைத்து கொடூரமாக கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
இப்னு அப்துல் வஹ்ஹாப், ஸஹாபாக்களின்
மண்ணறைகளை உடைத்தெறிந்து
மகிழ்ச்சியடைந்தார். இவ்வாறு
படுபயங்கரமான அராஜகங்கள்
புரிந்து தன்
கொள்கைக் கொடியை
இஸ்லாமிய எதிரிகளின் உதவி, ஒத்தாசையோடு அதியுயர்
உச்சத்திற்கு உயர்த்திவிட்டார்.
இவை மறக்கமுடியாத கறைபடிந்த உண்மை நிகழ்வுகள். தவிர, இவை கற்பனைக் கதைகளல்ல. உலகறிந்த நிகழ்வுகளாகும். ஆதாரபூர்வமாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் அம்சங்களாகும். அதனால்தான் “வஹ்ஹாபிகள்”
இந்தக்
காலத்தின்
“க்வாரிஜ்கள்” என்று இப்னு ஆபிதீன் அல்- ஹனஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்
“ரத்துல் முக்தார்” என்ற நூலிலும், அல்லாமா ஸாவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் “ஹாஷியா
தஃப்ஸீர்
ஜலாலைன்” என்ற நூலிலும் பதிவு செய்து வைத்துள்ளனர். இதுவே, எகிப்து அல்-அஸ்ஹர்
பல்கலைக்கழகத்தின் ஷைக் ஆகிய அஹ்மத் தய்யிப் அவர்களின் கருத்துமாகும்.
கொடும்பாவி இப்னு அப்தில் வஹ்ஹாபினால் “தவ்ஹீத்” என்ற பெயரில் உருவான பொய்யான போலியான நவீன கொள்கை மாற்றத்தினை அடுத்து, குவைத்(ஹிஜ்ரி 1205),
தோஹா (ஹிஜ்ரி 1206), யமன் (ஹிஜ்ரி 1220),
ஜோர்தான் (ஹிஜ்ரி 1207), பஹ்ரைன் (ஹிஜ்ரி 1220),
பக்தாத் (ஹிஜ்ரி 1216), தாயிப் (ஹிஜ்ரி 1217),
மக்கா முகர்ரமா (ஹிஜ்ரி 1218), மதீனா முனவ்வரா (ஹிஜ்ரி 1220) போன்ற பக்கத்து நாடுகளையும் பிரதேசங்களையும் கைப்பற்றும் நோக்கில் அவர் அணி படையெடுத்து இப்பிரதேசங்களிலும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது.
ஜஸாயிரியில் மட்டும் 180,000 பேர்கள் இக்கொலைகார கும்பலினால் கொலை செய்யப்பட்டனர். (நூல்; தக்ஃபீருல் வஹ்ஹாபிய்யா லில்அத்ராகி வத்தவ்லதில் உஸ்மானிய்யா
வலிஉமூமில் உம்மத்தில் இஸ்லாமிய்யா)
இப்னு அப்தில் வஹ்ஹாபும் மெளலவி இஸ்மாயீல் திஹ்லவியும்
இவ்வாறு உலகின் நாலாபுறத்திலும் இப்னு அப்தில் வஹ்ஹாபின் நவீன மார்க்கம், மேற்குலக அரச படையின் உதவியுடன் சந்தைப்படுத்தப்பட்டுக்கொண்டு வரும் சந்தர்ப்பத்தில்தான் இந்தியாவைச் சேர்ந்த மௌலவி இஸ்மாயீலின் “தக்வியதுல் ஈமான்” என்ற நூல் ஹிஜ்ரி 1240 ல் இந்தியாவில் வெளிவருகிறது.
மௌலவி இஸ்மாயீல், (பிறப்பு ஹிஜ்ரி 12 ரபீஉல் அவ்வல் 1193 கி.பி. 26-04-1779-
இறப்பு ஹிஜ்ரி1246 கி.பி. 06-5-1831) அஷ்ஷாஹ் வலிய்யுல்லாஹ் அவர்களின் மகன் அஷ்ஷாஹ் அப்துல் கனியின் புதல்வராகும். தந்தையின் மறைவை அடுத்து சிறிய தந்தை அஷ்ஷாஹ் அப்துல்காதிர் அவர்களினால் பராமரிக்கப்பட்டு கல்வியும் கற்றுக் கொடுக்கப்படுகிறார். அஷ்ஷாஹ் அப்துல் அஸீஸ் வலிய்யுல்லாஹ்,
அஷ்ஷாஹ் ரபீஉத்தீன் வலிய்யுல்லாஹ் ஆகிய இரு சிறிய தந்தைகளிடமும் இவர் கல்வி கற்றிருக்கிறார்.
இப்னு அப்தில் வஹ்ஹாபின் “கிதாபுத் தவ்ஹீத்” என்ற அறபி மொழி நூலை மௌலவி இஸ்மாயீல் திஹ்லவி “தக்வியதுல் ஈமான்” என்ற பெயரில் உர்து மொழியில் மொழி
பெயர்த்தார். இது, ஹிஜ்ரி 1240 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் பிறை
15 இல் வெளியிடப்பட்டது.
“தக்வியதுல் ஈமான்” என்ற நூல், இப்னு அப்தில் வஹ்ஹாபின் பிழையான மார்க்கத்திற்குப் புறம்பான விஷக் கருத்துகளைச் சுமந்துள்ள நூல் என்று அக்காலத்து அறிஞர்கள் மற்றும் ஷைகுமார்கள் முடிவு செய்ததையடுத்து அந்நூலுக்கு மறுப்புத் தெரிவிக்க ஆரம்பித்தனர்.
அதன் முதல் கட்டமாக, மெளலவி இஸ்மாயீல்
திஹ்லவியின் அந்நூலை அவரது சிறிய தந்தையான அஷ்ஷாஹ் அப்துல் அஸீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நிராகரித்தார்கள்.
அந்தக் கால உலமாக்களில் அஷ்ஷாஹ் அப்துல் ஹை பதாநவீ என்பவரைத் தவிர வேறெவரும் மௌலவி இஸ்மாயிலுக்கு சார்பாக, பக்க பலமாக, துணையாக நிற்கவில்லை. இவர், மௌலவி இஸ்மாயீலை பின்பற்றுமாறு பிரசாரம் செய்தார். அஷ்ஷாஹ் வலிய்யுல்லாஹ் அவர்களின் குடும்ப மகிமையைக்கூறி மக்களை மயக்கினார். அவர் சொல்வதில் பிழை இருப்பின் விவாதிக்க வருமாறு சவால் விட்டார்.
இதனடிப்படையில் ஹிஜ்ரி 1240 ஆம் ஆண்டு பிறை 19 ரபீஉல் ஆகிர் மாதம் இந்தியாவின் தலை நகரான டில்லியின் பெரிய ஜும்ஆப் பள்ளி வாயிலில் விவாதம் ஒன்று இடம்பெற்றது. மௌலவி இஸ்மாயில் மற்றும் அஷ்ஷாஹ் அப்துல் ஹை ஆகிய இருவரோடும் விவாதிப்பதற்காக, அஷ்ஷைக் ரஷீதுத்தீன், அல்லாமா ஃபழ்ல் ஹக் கைராபாதீ மற்றும் மௌலவி இஸ்மாயிலின் சிறிய தந்தையின் பிள்ளைகளான அஷ்ஷைக் மக்ஸூசுல்லாஹ்,
அஷ்ஷைக் முஹம்மத் மூஸா ஆகியோர் இஸ்மாயீல்
திஹ்லவிக்கு எதிரான அன்றைய அவ்விவாதத்தில் கலந்துகொண்டனர்.
மௌலவி இஸ்மாயிலும் அஷ்ஷாஹ் அப்துல் ஹைய்யும் விவாதத்தில் தோல்வியைத்தான் தழுவ முடிந்தது. ஆனாலும் கூட தங்களது கடும்போக்குவாதக் கருத்துக்களில் இருந்து அவர்கள் மீளவில்லை. இதனையடுத்து “முஈதுல் ஈமான்” என்றதொரு நூலினை இஸ்மாயீல் திஹ்லவியின் சாச்சாவின் மகன் அஷ்ஷைக் மக்சூஸுல்லாஹ்வும், “தஹ்கீகுல் ஃபத்வா ஃபீ இப்தாலித் துக்வா,
“இம்தினாஉன் நளீர்”
ஆகிய இருநூற்களை மௌலானா ஃபழ்ல் ஹக் கைராபாதி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களும்
எழுதி மௌலவி இஸ்மாயிலின் வழிகேடுகளை நூலுருவில் வெளியிட்டனர்.
“தஹ்கீகுல் ஃபத்வா ஃபீ இப்தாலித் துக்வா” என்னும் நூல் ஹிஜ்ரி 1240 ரமழான் மாதம் பிறை 18 இல் கோர்வை செய்யப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.
இப்னு அப்தில் வஹ்ஹாப், தன்னைப் பின்பற்றியவர்களுக்கு பைஅத் கொடுத்து மார்க்கத்தின் பெயரில் ஒரு புதுக்கூட்டம் ஒன்றை கட்டமைத்து ஜிஹாத் என்ற பெயரில் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் மக்களை முஷ்ரிக்குகள் என்று கூறி இலட்சோபலட்சம் மக்களைக் கொலை செய்தான்.
அவ்வாறே, மௌலவி இஸ்மாயீல் தன்னுடைய குருவான ஸெய்யித் அஹ்மத் ராய் பரேலியுடன் பைஅத் செய்து கொண்டு, ‘ஜிஹாத்’ என்ற பெயரில் ஒரு நவீன கூட்டத்தை உருவாக்கி மாற்று மதத்தவர்களோடு யுத்தம் செய்வதற்கென்று புறப்பட்டுச் சென்று அன்றைய இந்தியா ஆப்கான் எல்லைப் பிரதேச முஸ்லிம்களை “முஷ்ரிக்குகள்” என்று கூறி பெண்கள், பலவீனமானவர்கள், வயோதிபர்கள் என பல பிரதேச பட்டாணிகளைக் கொலை செய்தான்.
இதையறிந்த அவ்வூர் உலமாக்கள் அவ்விருவரையும் கொலை செய்யுமாறு ஃபத்வா வழங்கினார்கள். அதனடிப்படையில் அவ்விருவரும் வெட்டி வீழ்த்தப்பட்டார்கள். (நூல்: தேவபந்த் ஓர் வஹ்ஹாபிய பாசறை) இவ்வாறு கொலை செய்யப்பட்ட கொடும் பாவியைத்தான், “ஷஹீத்” என்று கூறி போற்றிப் புகழ்கிறது
முட்டாள்களின் கூட்டம்.
இன்னும் சுமார் ஹிஜ்ரி 1265
ஆம் ஆண்டளவில் “சைபுல் ஜப்பார்” என்ற பெயரில் இஸ்மாயீல் திஹ்லவிக்கு எதிராக மற்றுமொரு நூல் எழுதி வெளியிடப்பட்டது. இதனை மௌலானா அஷ்ஷாஹ் ஃபழ்ல் ரசூல் காதிரி பதாயூனி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தொகுத்து வெளியிட்டார்கள்.
மேலும் “தன்கீத் தக்வியதுல் ஈமான்”
என்றதொரு நூலும் தக்வியதுல் ஈமானுக்கு எதிராக வெளிவந்தது. இதனை, பெரும் மதிப்புக்குரிய மாட்சிமை கொண்ட செய்யிதுனா வமவ்லானா ஷைகுல் ஆரிபீன் ஹழ்ரத் அஷ்ஷாஹ் முக்லிசுர் ரஹ்மான் ஜஹான்கீரி ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்கள் எழுதியிருந்தார்கள். (பிறப்பு ஹிஜ்ரி 1229 மறைவு 1302)
இவர்கள்தான்
இஸ்மாயீல்
திஹ்லவி “காஃபிர்” ஆவார் என்று ஃபத்வா வழங்கிய முதல் மனிதப் புனிதராகும்.
ஷம்ஷுல் உலமா, குத்புல் அவ்லியா, இமாமுல் ஃபுகஹா முஹம்மது அப்துல்லாஹில் குராஸானி (மறைவு ஹிஜ்ரி 13௦5) ஜிஷ்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் “அஸ்ஸுயூஃபுல் பாரிகா அலா ருஊசில் ஃபாசிகா” என்ற தலைப்பில் இஸ்மாயீல் திஹ்லவியை “காஃபிர்” என்று ஃபத்வா கொடுத்திருக்கிறார்கள்.
இந்த பத்வாவை மக்கா முகர்ரமா, மதீனா முனவ்வராவில் உள்ள மரியாதைக்குரிய 12 பெருந்தகைகள் சரி கண்டு சிறப்புரை வழங்கியுள்ளனர். அவர்களில் அல்லாமா ஸெய்யித் அஹ்மத் பின் ஸைனீ தஹ்லான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி (மறைவு ஹிஜ்ரி 1304 கி.பி.1886) அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
கீழக்கரை சங்கைக்குரிய பெரியார் அல் ஆலிமுல் அரூஸ் அல்லாமா ஸெய்யிது முஹம்மது மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (மறைவு ஹிஜ்ரி 1316 கி.பி. 1898)
வலியுல்லாஹ் அவர்கள் ‘மஙானி’ என்னும் நூலின் 177-178 பக்கங்களில் “இஸ்மாயீல் திஹ்லவி என்பவர், முஹம்மது இப்னு அப்தில் வஹ்ஹாப் நஜ்தியை பின்பற்றிய வழிகெட்ட மடையனாவார்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
அத்துடன் அல்லாமா அஹ்மத் ஹசன் கான்பூரி (மறைவு ஹிஜ்ரி 1317)அவர்கள் “தன்ஸீஹுர் ரஹ்மான் அன் ஷாஇபாதில் கித்பி வன்நுக்ஸான்” என்ற நூலை “தக்வியதுல் ஈமான்” என்ற நூலுக்கு மறுப்பாக எழுதியிருந்தார்கள்.
மேலும், ஹிஜ்ரி 1312 ஆம் ஆண்டு ஜமாதுல் அவ்வல் மாதம் பிறை 22 இல் அஃலா ஹழ்ரத் அழீமுல்பரகத் இமாமே அஹ்லுஸ் சுன்னத் அஷ்ஷாஹ் இமாம் அஹ்மத் ரழா கான் ரஹ்மதுல்லாஹி அலைஹி
அவர்களிடம் பின்வருமாறு கேள்வியொன்று கேட்கப்பட்டது. அதாவது: இஸ்மாயீல் திஹ்லவி என்பவரை
இமாமாக – வழிகாட்டியாக அங்கீகரித்து அவரது
கருத்துக்களைப் பின்பற்றுகின்றவர்களை “காஃபிர்கள்” என்று கூற முடியுமா? எனக் கேட்கப்பட்ட வினாவுக்குப் பதிலாக
எழுதப்பட்ட நூல்தான் “அல்-கவ்கபதுஷ் ஷிஹாபிய்யா ஃபீ குஃப்ரிய்யாதி அபில் வஹ்ஹாபிய்யா” என்னும் நூலாகும்.
இமாம் அஹ்மத் ரழா கான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஹிஜ்ரி 1340 ஆம் வருடம் ஸஃபர் மாதம் பிறை 25, கி.பி. 28.08.1921 இல் மறுவுலகைச் சென்றடைர்ந்தார்கள்.
மேலும் ஹிஜ்ரி 1345
இல் “அஸ்ஸவாரிமுல் ஹிந்திய்யா” என்றதொரு ஃபத்வா இஸ்மாயீல் திஹ்லவிக்கு
எதிராக வெளிவந்தது. அதில் இந்தியாவிலுள்ள பஞ்சாப், வங்காளம், சென்னை, பலுசிஸ்தான், குஜராத் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 268 உலமாக்கள் கைச்சாத்திட்டிருந்தனர்.
இவர்களெல்லாம், மெளலவி இஸ்மாயீல்
திஹ்லவியின் “தக்வியதுல் ஈமான்” என்ற நூலில், பொய்யான, போலியான,
பிழையான, மார்க்கத்திற்கு முற்றிலும் முரணான கருத்துக்கள் பதிவாகியுள்ளதாகப்
பிரசாரம் செய்தனர். அவரையும் அவர் கருத்துக்களையும் பின்பற்ற வேண்டாமென்று
எச்சரித்தனர். மேலும், அவரின் குருவான செய்யித் அஹ்மத் ராய்
பரேலி என்பவரை உள்ளடக்கிய பாதைகளெல்லாம் போலியான பிழையான பாதைகள் என்று கூறி
மக்களுக்கு விழிப்பூட்டினர்.
இப்படிப்பட்ட “தக்வியதுல் ஈமான்” என்ற நூலைத்தான் ஒவ்வொருவரும் படிப்பது வாஜிப் –
கட்டாயக்
கடமை என
மெளலவி
அஷ்ரஃப்
அலி
தானவியும்
அவர்
தோழர்களும்
பிரசாரம்
செய்தனர். மேலும், இவர்களின் கொள்கைதான் என்னுடைய கொள்கை என்று கூறியவர்தான் தப்லீக் இயக்கத் தலைவர் மெளலவி இல்யாஸ் காந்தலவி.
“நாயகமே யா ரசூலல்லாஹ்! எனக்கு உதவி செய்யுங்கள், என்னைப் பாதுகாருங்கள், என் கஷ்டங்களை நீக்கி வையுங்கள்” என்று நபிகள் நாயகத்திடம் நேரடியாக, அல்லது அவர்கள் பொருட்டினால் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க முடியுமா? அல்லது அவ்வாறு பிரார்த்திப்பது “ஷிர்க்” ஆகுமா? என்று, இப்னு தைமிய்யா, இப்னு அப்தில் வஹ்ஹாப், இஸ்மாயீல் திஹ்லவி, இல்யாஸ், மெளதூதி போன்றவர்களைப் போற்றிப் புகழ்கின்றவர்களிடம் கேட்டுப் பார்த்து அவர்களெல்லாம் யார் என்பதைப் புரிந்து
கொள்ளுங்கள்.
78-வது அந்நபஃ என்னும் அத்தியாயம் முற்றுப்
பெற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக