ஒரே இஹ்ராத்தில் பல உம்ராக்கள் செய்ய முடியுமா?
ஒரே நாளில் பல உம்ராக்கள் செய்வதாக இருப்பினும் ஒவ்வொரு உம்ரா வுக்கும் தனித்தனியாக மீகாத்துக்குச் சென்று “இஹ்ராம்” அணிய வேண்டும். தனித்தனியாக “தவாஃப், ஸயீ” என்பனவும் செய்யவும் வேண்டும். உதார ணமாக மக்காவில் தொழில் புரியும் ஒருவர் உம்ரா செய்வதாக இருப்பின் அவர் அருகிலுள்ள “மீகாத்து” க்குச் சென்று நிய்யத்துடன் இஹ்ராம் அணிந்து கொள்ளவேண்டும். பின்னர் ஏழு விடுத்தங்கள் புனித கஃபாவை வலம் வர வேண்டும். பின்னர்ஏழு விடுத்தங்கள் ஸபாஇ மர்வா இடையில் ஓட வேண்டும். தலை முடி களைய வேண்டும். இது ஒரு உம்ராவுக்கான செயல் முறையாகும்.
இவ்வாறு ஒரு உம்ரா செய்து முடித்தவர் இரண்டாவது தடவையாக மீண்டும் உம்ரா செய்ய விரும்பினால் முதல் தடவையில் எவ்வாறு நடந்து கொண்டாரோ அவ்வாறே இரண்டாம் தடவையும் செய்து கொள்ள வேண்டும். எனவே ஒரு தடவை நிய்யத்தோடு அணிந்த இஹ்ராம் ஆடையுடன் ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ் மற்றும் உம்ராக்களை நிறைவேற்ற முடியாது.
மரணித்தவருக்காக ஹஜ் மற்றும் உம்ரா.
“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் வருகை தந்த பெண் ஒருவர் யா ரசூலல்லாஹ்! ஹஜ் கடமையினை நிறைவேற்றாது மரணித்த எனது தாயாருக்காக நான் ஹஜ் செய்து கொள்ளட்டுமா? என்று கேட்டார். அதற்கு ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஆம். நீங்கள் அவருக்காக ஹஜ் செய்து கொள்ளுங்கள் என்று பதில் கூறினார்கள்.” (முஸ்லிம்)
“கஸ்அம் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! ஹஜ் அல்லாஹ்வின் அடியார்கள் மீதுள்ள அவனது கடமையாக இருக்கிறது. எனது தந்தை வாகனத்தில் அமர முடியாதளவு வயோதிபராக இருக்கிறார். ஆகையால் நான் அவருக்காக ஹஜ்ஜை நிறைவேற்றலாமா? எனக் கேட்டார். ஆம். அவருக்காக நீங்கள் ஹஜ் செய்து கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்.” (புகாரி முஸ்லிம்.)
“ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து எனது சகோதரி ஹஜ் செய்ய நேர்ச்சை செய்திருந்தார்
. அதற்கு முன் அவர் மரணித்துவிட்டார் என்று கூறினார். அவள் மீது கடன் இருப்பின் நிறைவேற்றுவீர்தானே! என்று அவரிடம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கேட்க ஆம்என்றார். அப்படியானால் அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள். அவன் நிறைவேற்ற மிகத் தகுதியானவன் என்று விடை பகர்ந்தார்கள்.” (புகாரி)
எனவே மரணித்த உறவுகளுக்காக ஹஜ் மற்றும் உம்ராக் கடமைகளை நிறைவேற்ற முடியும். அதன் பலனை அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர்.
பிறருக்காக ஹஜ்.
ஒருவர் தனது பெற்றோருக்காக அல்லது உறவினர்களுக்காக ஹஜ் செய் வதாக இருப்பின் முதலாவதாக அவர் தனக்குரிய ஹஜ்ஜை நிறை வேற்றி யிருக்க வேண்டும்.
“ஒருவர் "லப்பைக் அன் ஷஷுப்ருமா"- இது ஷுப்ருமா என்பவருக்கான ஹஜ் எனக் கூறியபோது யார் அந்த ஷுப்ருமா என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் வினவியதற்கு அவர் எனது சகோதரர் அல்லது எனது உறவினர் என்று அவர் பதில் கூறினார். நீங்கள் உங்களுக்காக ஹஜ் செய்துவிட்டீர்களா? என்று கேட்டார்கள். இல்லை என்றதும் முதலில் (உங்களுக்காக) ஹஜ் செய்து கொள்ளுங்கள். பின்வரும் காலங்களில் ஷுப்ருமாவுக்காக ஹஜ் செய்து கொள்ளுங்கள் என்றார்கள்.” (அபூ தாவூத்)
யூதனாக அல்லது கிறிஸ்தவனாக மரணிக்கட்டும்.
புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்குப் போதுமான வசதியும் வாய்ப்பும் பெற்றுக்கொண்ட ஒருவர் அக்கடமையினை நிறைவேற்றாது மரணிப்பாராக இருந்தால் அவர் பாவியாக மரணிப்பார்.
“அல்லாஹ்வின் வீட்டுக்குச் செல்வதற்குப் போதிய பொருளாதாரமும் உடல் ஆரோக்கியமும் சீரான போக்குவரத்தும் பெற்றிட்ட ஒருவர் ஹஜ் செய்யாமல் மரணிப்பாராயில் யூதனாக அல்லது கிறிஸ்தவனாக மரணிப்பதில் தப்பில்லை” என்றார்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள்.
ஹஜ், உம்ராக்களுக்கான காலங்கள்.
ஹஜ்ஜுக்கான காலங்களாக ஷவ்வால், துல்கஅதா, துல் ஹிஜ்ஜா ஆகிய மாதங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில் ஒருவர் ஹஜ்ஜுக்காக ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறை முதல் துல்ஹிஜ்ஜா மாதம் பிறை எட்டு வரை ஹஜ்ஜுக்காக தன்னை தயார்படுத்திக்கொள்ள முடியும். அதே வேளை உம்ராவினை நிறைவேற்றிட கால நிர்ணயம் கிடையாது.
இஹ்ராமில் நுழைவதற்கான (மீகாத்) எல்லைகள்.
ஹஜ் மற்றும் உம்ரா கடமையினை நிறைவேற்றுவதாக இருந்தால் அதற்காக இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களினால் எல்லைகள் வறையறுக்கப்பட்டுள்ளன. ஹஜ், மற்றும் உம்ராவுக்காக பயணம் செய்து அவற்றைக் கடந்து செல்வோர் இஹ்ராம் இல்லாது அந்த எல்லைகளைக் கடந்து செல்லக்கூடாதென்று உத்தரவிடப்பட்டிருக்கின்றார்கள். அதையும் மீறி ஒருவர் செல்வாராயின் இஹ்ராம் அணிந்து செல்லாத குற்றத்திற்காக அவர் “ஃபித்யா” எனப்படும் குற்ரப்பரிகாரம் நிறைவேற்றுவது அவசியமாகும்.
மதீனா முனவ்வரா வழியாகச் செல்வோர் “துல்ஹுலைபா” விலிருந்தும், எகிப்து, ஜோர்தான் போன்ற நாடுகளில் இருந்து ஜித்தா வழியாக செல்வோர் “ஜுஹ்பா” தற்போதய “ராபிஹ்” எல்லையில் இருந்தும் எமன் மற்றும் அதன் வழியாக வருவோர் “எலம்லம்” தற்போதய “ஸஃதிய்யா” எல்லையில் இருந்தும், தாயிப் வழியாக வருவோர் தாயிபிலுள்ள “அஸ்ஸைலுல் கபீர்” என்றழைக்கப்படும் “கர்னுல் மனாஸில்” எல்லையில் இருந்தும் இராக்கில் இருந்து வருவோர் “தாது இர்க்” தற்போதைய “ழரீபா” எல்லையில் இருந்தும் ஹஜ் அல்லது உம்ராவிற்கான “நிய்யத்” செய்து “இஹ்ராம்” ஆடை அணிந்து செல்ல வேண்டும்.
“துல் ஹுலைபா” என்ற இடம் மக்காவுக்கு தெற்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. “ஜுஹ்ஃபா” என்ற இடம் மக்காவுக்கு வடக்கில் 187 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. “கர்னுல் மனாஸில்” மக்காவுக்கு கிழக்கில் உள்ள ஒரு மலையின் பெயராகும். மக்காவில் இருந்து 94 கிலோ மீட்டர் தொலைவில் அது உள்ளது. “யலம்லம்” என்பது மக்காவுக்கு வடக்கே உள்ள ஒரு மலையாகும். இது மக்காவில் இருந்து 54 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இலங்கை மற்றும் இந்தியர்களுக்கான எல்லை.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பர்மா, மலேசியா, சிங்கபூர், இந்தோனே சியா, ஹொங்கொங் ஆகிய நாட்டுப் பிரஜைகள் தரை மற்றும் கடல், வான் மார்க்கமாக ஹஜ் உம்ராவுக்கு பயணிப்போருக்கு “யலம்லம்” என்ற இடம் இஹ்ராம் அணிவதற்கான எல்லையாகும். ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் ஒருவர் இஹ்ராம் அணியாது இவ்விடங்களைக் கடக்கக் கூடாது.
தத்தமது நாடுகளில் இருந்து புறப்படும்போதே நிய்யத்துடன் இஹ்ராம் ஆடையினை அணிபவர்கள் தங்களுக்குரிய எல்லையைக் கடக்கும்போது “தல்பியா” கூறிக்கொள்ள வேண்டும். வீட்டில் அல்லது நாட்டில் இருந்து புறப்படும்போது இஹ்ராம் அணிந்துகொண்டு புறப்படுவதைவிட உரிய எல்லையில் வைத்து நிய்யத்துடன் இஹ்ராம் அணிந்து கொள்வது ஸுன்னத்தாகும்.
நிய்யத், தல்பியா.
ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிபவர் “நவைத்துல் ஹஜ்ஜ வஅஹ்ரம்து பிஹி லில்லாஹி” என்றும் உம்ராவுக்காக இஹ்ராம் அணிபவர் “நவைத்துல் உம்ரத வஅஹ்ரம்து பிஹா லில்லாஹி” என்றும் மனதில் நினைத்துக் கொள்ளவேண்டும். வாயினால் உச்சரிப்பது முஸ்தஹப்பாகும்.
பிறருக்காக ஹஜ் மற்றும் உம்ராவினை நிறைவேற்ற விரும்புவர் யாருக்காக இஹ்ராம் அணிகின்றாரோ அவரின் பெயரையும் அதில் குறிப்பிட்டுக் கொள்ளவேண்டும். உதாரணமாக பஷீர் என்பவருக்காக ஹஜ் செய்வதாக இருப்பின் “நவைத்துல் ஹஜ்ஜ அன் பஷீரின்” என்று நிய்யத் வைக்க வேண்டும்.
நபிகள் நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஹஜ் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து நிய்யத் வைத்து ஒட்டகத்தில் அமர்ந்த பின்னர் பின்வருமாறு “தல்பியாக்” கூறுவார்கள். இஹ்ராம் அணிகின்ற போது மெதுவாக கூறிக் கொள்வதுடன் பிற சந்தர்ப்பங்களில் இதை தனித்தனியே சப்தத்தை உயர்த்திக் கூற வேண்டும்.
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك
பொருள்: “அல்லாஹ்வே! உனது அழைப்பிற்கு விடை கொடுத்து உன்னை மென்மேலும் வழிப்பட்டுவிட்டேன். அல்லாஹ்வே! உனது அழைப்பிற்கு விடை கொடுத்து உன்னை மென்மேலும் வழிப்பட்டுவிட்டேன். உனக்கு எந்த இணையாளரும் கிடையாது. புகழும் அருளும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு எந்த இணையாளரும் கிடையாது.” (புகாரி, முஸ்லிம்)
“ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் வந்து தல்பியாவால் சப்தத்தை உயர்த்தும்படி உங்களது தோழர்களுக்கு கூறுங்கள் என்று கூறிச் சென்றதாக செம்மல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சொன்னார்கள்.” (அபூ தாவூத், நஸாயீ)
தல்பியா நிறுத்தப்பட வேண்டிய இடம்.
இஹ்ராம் கட்டியவர்கள் அதிகமதிகம் தல்பியாவைக் கூற வேண்டும். “யவ்முன் நஹ்ர்” தினத்தன்று முஸ்தலிபாவிலிருந்து திரும்பி வந்ததும் ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறியும் வரை தல்பியாக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறிந்து முடிந்தவுடன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
“நான் நபிகள் நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஒட்டகத்தில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து அரபாவில் இருந்து மினா வரை சென்றேன். ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள்.” (புகாரி)
“நான் அரபாவில் இருந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுடன் புறப்பட்டேன். அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும் போதும் தல்பியா கூறினார்கள். கடைசிக் கல்லுடன் தல்பியாவை நிறுத்திக் கொண்டார்கள்.” (இப்னு குஸைமா)
எந்தெந்த இடங்களில் நேரங்களில் குறிப்பிட்ட துஆக்கள் ஓத வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளதோ அந்த இடங்கள் தவிர எல்லா இடங்களிலும் தல்பியாவை அதிகம் கூற வேண்டும்.
தல்பியாவின் சிறப்பு.
“தல்பியாக் கூறும் முஸ்லிமின் வலது மற்றும் இடது புறங்களில் காணப்படும் கற்கள், மரங்கள், மண் இங்கும் அங்குமாக பூமி முடிவடையும் வரை தல்பியாக் கூறுகின்றன என நம் நயாகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள்.” (திர்மிதி, இப்னுமாஜா)
“சப்தமாக தல்பியாக் கூறும் ஹஜ்ஜானது மிகச் சிறந்த ஹஜ்ஜாகும் என்றும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.” (திர்மிதி)
இந்த தல்பியாவினை சகல நேரங்களிலும் இடங்களிலும் சுத்தமான அசுத்தமான கால கட்டங்களிலும் நின்றவர்களாக, அமர்ந்தவர்களாக, உறங்கினவர்களாக ஆண் பெண் இரு சாராரும் சொல்லிக் கொள்ளவது ஸுன்னத்தாகும். தவாஃபு மற்றும் ஸயீ செய்யும் காலங்களில் அவைகளு க்கென தனி துஆக்கள், திக்ருகள் இருப்பதால் தல்பியா ஓத வேண்டியதில்லை.
இஹ்ராம் அணியும் முன்னர் பேணப்பட வேண்டிய அம்சங்கள்.
“நபிகள் நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இஹ்ராம் கட்டும் போது என்னிடம் உள்ள நறுமணத்தில் மிகச் சிறந்ததைப் பூசி விட்டேன் என உம்முல் முஃமினீன் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள்.” (புகாரி)
இஹ்ராம் ஆடையினை அணியும் முன்னர் தலை முடி, மீசை, தாடி, கமுக்கட்டு, மர்மஸ்தானம் போன்ற பகுதிகளின் முடிகளில் கவனம் செலுத்த வேண்டும். நீக்கக்கூடிய ரோமங்களை முற்றிலுமாக நீக்கிட வேண்டும். நகங்களை வெட்டிக் கொள்ளுங்கள். மாதர்களுக்கு தாடி, மீசை முளைத்திருந்தாலும் அதில் ஆணுக்குரிய சட்டம்தான். ஐந்தை விட அதிகமாக முளைத்திருக்கும் விரல்களில் உள்ள நகத்தையும் இஹ்ராம் அணிந்த பின்னர் வெட்டக்கூடாது.
நன்றாக குளிக்க வேண்டும். முடியாதவர்கள் வுழு செய்து கொள்ள முடியும். குளித்து அல்லது வுழுச் செய்து கொண்ட பின்னர் உடலுக்கு நன்றாக மணம் பூசிக் கொள்ளுங்கள். இஹ்ராம் ஆடைக்கு மணம் பூசுவது ஹராம். உடலில் பூசிக் கொண்ட வாசனைத் திரவியம் இஹ்ராம் ஆடையில் பட்டுக்கொள்வதில் தப்பில்லை. நிய்யத்துடன் இஹ்ராம் ஆடை அணிவதற்காக இரண்டு ரக்அத்துக்கள் தொழுதுகொள்வது முஸ்தஹப்பாகும். அதன் முதல் ரக்அத்தில் சூரா பாத்திஹாவுக்குப் பின்னர் சூரத்துல் காபிரூனும்இ இரண்டாம் ரக்அத்தில் சூரத்துல் இக்லாசும் ஓதுவது ஸுன்னத்தாகும்.
“மதீனாவின் எல்லையிலுள்ள துல் ஹுலைபா என்ற இடத்தினை ஹஜ்ஜுக்கா நிய்யத் செய்து அவ்விடத்தினைக் கடக்க முற்பட்டபோது வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து இந்த புனிதமான இடத்தில் தொழுது கொள்ளுங்கள் என்று கூறிச் சென்றதாக செம்மல் நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் நவின்றுள்ளார்கள்.” (புகாரி) இதனடிப்படையில் இஹ்ராம் அணிபவர் இரு ரக்அத்துக்கள் தொழுது கொள்வது ஸுன்னத்தாகும்.
கட்டாயக் குளிப்பு குளிக்க வேண்டிய பெண்கள் இஹ்ராம் அணிய முடியுமா?
குழந்தைகளைப் பிரசவித்த மற்றும் மாதவிடாயுடன் காணப்படும் மாதர்கள் சுத்தமாகுவதற்கு முன்னர் இஹ்ராம் கட்டிக்கொள்வதில் தப்பில்லை. இதற்கு மார்க்கம் அனுமதிக்கின்றது.
“அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் மனைவி அஸ்மா ரழிய ல்லாஹு அன்ஹா அவர்கள் (துல் குலைபா) மரத்தடியில் முஹம்மத் பின் அபூபக்கர் என்பவரைப் பிரசவித்தபோது அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அவரைக் குளித்து பின்பு தல்பியாக் கூறிக் கொள்ளும்படி நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.” (முஸ்லிம்)
“ஸரீப் என்ற இடத்தை (தற்போதைய நவாரிய்யாவை) அடைந்த போது மக்காவிற்குள் நுழையும் முன்னர் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அழுதவர்களாக ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் வந்தார்கள். ஏன் அழுகின்றீர்கள்? மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று வினவினார்கள். அவர்கள் ஆம் என்றதும், இது அல்லாஹ் ஆதம் நபியின் பெண் பிள்ளைகள் மீது விதித்த ஒன்றென்று கூறிவிட்டு ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய்து கொள்ளுங்கள். ஆனால் குளித்து சுத்தமாகும் வரை கஃபாவைத் தவாப் செய்ய வேண்டாம் என்று விடை பகர்ந்தார்கள்.” (புகாரி)
எனவே பிரசவத் தீட்டு மற்றும் மாதவிடாய் உண்டான பெண்கள் இஹ்ராம் அணிய முடியும். அதற்காக குளித்துக் கொள்வது ஸுன்னத். இஹ்ராத்தின் போது மாதர்களுக்கு தனியான ஆடை அமைப்பு கிடையாது. முகம், கை என்பன மட்டும் மறைக்கப்பட்டக்கூடாது.
இஹ்ராம் அணிகின்றபோது அமைதியாக மூன்று விடுத்தங்கள் தல்பியாவி னை கூறிக்கொள்வதுடன் நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மீது ஸலவாத்தும் கூறிக்கொள்ள வேண்டும். அல்லாஹ்விடம் உதவி தேடி இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்ளவேண்டும்.
எல்லைகளுக்கு உட்பட்டோர் மற்றும் மக்கா முகர்ரமாவில் வசிப்பவர்களுக்கான எல்லை.
“குறிப்பிட்ட எல்லைப் பிரதேசங்களுக்கு உட்பட்டோர் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தும் மக்காவாசிகள் மக்காவில் இருந்தும் இஹ்ராம் அணிவர் என நபிகள் நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.” (புகாரி, முஸ்லிம்)
எனவே குறிப்பிட்ட எல்லைப் பிரதேசங்களில் பிற நாடுகளில் இருந்து பணி புரிவதற்கென்று அங்கு சென்று வாழ்பவர்கள் உட்பட சகலரும் அவரவர்கள் வதிவிட எல்லையில் ஹஜ் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ள முடியும்.
மக்காவாசிகளும் மக்காவில் பணியாற்றுவதற்காகச் சென்று ஹரம் எல்லைக்குள் வாழ்பவர்களும் ஹஜ்ஜுக்காக மாத்திரம் அவரவர்களின் வீடுகளில் இருந்தவாறு இஹ்ராம் அணிந்து கொள்ள முடியும். மக்காவாசிகளும் மக்காவில் பணியாற்றுபவர்களும் உம்ராச் செய்வதாக இருந்தால் “தன்யீம்” என்ற இடத்திற்குச் சென்று இஹ்ராம் அணிந்து கொள்ள வேண்டும். இந்த இடத்தில்தான் “மஸ்ஜித் ஆயிஷா” அமையப் பெற்றிருக்கிறது.
வெளி நாடுகளில் இருந்து ஹஜ் உம்ராவுக்கு செல்கின்றவர்கள் நாடு திரும்புவதற்குள் மீண்டும் உம்ரா செய்ய விரும்பினால் மேற் சொன்ன இடத்திற்குச் சென்று இஹ்ராம் அணிந்து கொள்ள வேண்டும்.
மாதவிடாய் ஏற்படுவதை பிற்போடும் மாத்திரைகளை உபயோகிக்க முடியுமா?
ஹஜ் மற்றும் உம்ராவுக்காக பயணிக்கும் மாதர்கள் மாதவிடாய் வருவதை பிற்போடுவதற்கான மாத்திரைகளை பின் விளைவுகள் இல்லாதிருப்பின் உபயோகித்துக்கொள்வதில் தப்பில்லை. அவ்வாறான மாத்திரைகளை உபயோகித்துக்கொள்ளாத மாதர்களுக்கு குறிப்பிட்ட கடமைகளை பூர்த்தி செய்வதற்குள் மாதவிடாய் ஏற்படுமாக இருந்தால் அசுத்தமான நிலையில் “தவாஃப்” செய்வதற்கு மாத்திரம் மார்க்கத்தில் அனுமதி இல்லை. பிற கடமைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். குளித்து தூய்மையான பின்பு விடுபட்ட தவாஃப் கடமையை நிறைவேற்ற முடியும்.
ஹஜ்ஜின் வகைகள்.
ஹஜ்ஜையும் உம்ராவையும் மூன்று விதமாகச் செய்யலாம்.
1- இஃப்ராத்: “அல்லாஹும்ம லப்பைக்க ஹஜ்ஜன்” என நிய்யத் செய்து ஹஜ்ஜுக்காக மட்டும் முதலில் இஹ்ராம் கட்டி ஹஜ்ஜின் கடமைகளை நிறைவேற்றி விட்டு இஹ்ராத்தில் இருந்து விடுபட்டுவிட்டு பின்னர் அதே வருடம் விரும்பினால் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டுவது. இதற்கு “இஃப்ராதுன்” என்று சொல்லப்படும். இது ஹஜ்ஜின் வகைகளிற் சிறந்தது. மக்காவில் வசிப்பவர்கள் இந்த வகையான இஹ்ராத்தினை மட்டுமே கட்டி ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும்.
இவர் கஃபாவுக்குள் நுழைந்ததும் நிறைவேற்றப்படும் தவாஃபுல் குதூமை நிறைவேற்றியதைத் தொடர்ந்து “ஸயீ” செய்திருப்பின் துல்ஹஜ் பிறை பத்தில் நிறைவேற்றப்படும் தவாஃபுல் இஃபாழாவுக்குப் பின்னால் “ஸயீ” செய்ய வேண்டியதில்லை. இவருக்கு தவாஃபுல் குதூம் தவறி விடுமானால் அதில் தவறில்லை. இவருக்கு ஃபித்யாவெனும் தண்டப் பரிகாரமாக மிருகத்தை அறுத்துப் பலியிடுவது வாஜிபுமில்லை.
2- கிரான்: ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டுவது. இதற்கு “கிரானுன்” என்று சொல்லப்படும். இவர் “அல்லாஹும்ம லப்பைக ஹஜ்ஜன் வஉம்ரதன்” என நிய்யத் செய்து முதல் தவாபினை (தவாஃபுல் குதூம்) நிறைவேற்றிய பின்னர் ஸயீ செய்து இருப்பின் பிறை பத்தில் புரியப்படும் தவாஃபுல் இஃபாழாவுக்குப் பின்னர் ஸயீ செய்யத் தேவை இல்லை. தவாஃபுல் குதூம் தப்பிவிட்டாலும் தப்பில்லை.
இவர் பிறை பத்தாம் நாளில் நிறைவேற்ற வேண்டிய கடமைகளைப் பூர்த்தி செய்த பின்னரே இயல்பான நிலைக்குத் திரும்புவார். இவர் வெளியூர்காரராக இருப்பின் “ஃபித்யா” கொடுப்பது வாஜிபாகும். ஹரம் எல்லையில் குடியிருப்பவர்களுக்கு அந்த ஃபித்யா வாஜிபாகாது.
3- தமத்துஃ- ஹஜ்ஜுடைய மாதம் ஒன்றில் எல்லையில் இஹ்ராம் அணியும் ஒருவர் “அல்லாஹும்ம லப்பைக உம்ரதன்” என்ற தல்பியாவுடன் உம்ராவுக்காக மாத்திரம் நிய்யத் செய்து மக்காவுக்குச் சென்று உம்ராவுக்கான சகல கடமைகளையும் நிறைவு செய்த பின்னர் இஹ்ராத்தினைக் களைந்து சாதாரண நிலைக்கு வந்து மக்காவிலேயே தங்கியிருக்க வேண்டும்.
பின்னர் துல் ஹஜ் மாதம் பிறை எட்டில் மக்காவில் இருந்து ஹஜ்ஜுக்காக மீண்டும் நிய்யத் செய்து “லப்பைக ஹஜ்ஜன்” என்ற நிய்யத்துடன் இஹ்ராம் அணிந்து தனது ஹஜ்ஜுக்கான சகல கடமைகளையும் நிறைவு செய்யும் வழி முறைக்கு ஹஜ் தமத்துஃ எனக் கூறப்படும். இவரும் ஃபித்யாக் கொடுப்பது வாஜிபாகும்.
எனவே “கிரான்” மற்றும் “தமத்துஃ” முறைப்படி ஹஜ் செய்தவர்கள் மீது வாஜிபாக்கப்பட்டுள்ள ஃபித்யாவினை “ஹத்யுன்” என்றும் சொல்லப்படும். இது துல் ஹஜ் பிறை பத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் அன்றுதான் கொடுக்க வேண்டும். மேலும் அதை ஹரம் ஷரீபின் எல்லைக்கள் கொடுக்க வேண்டும். அதிலும் மினாவில் கொடுப்பது ஸுன்னத்தாகும். (ஃபித்யா தொடர்பான கருத்துக்கள் பின்னால் விபரிக்கப்படும்.)
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து ஹஜ்ஜுக்காக செல்வோர் தமத்துஃ முறையினை அதிகம் கடைப்பிடிப்பதுண்டு. அதுவே அவர்களுக்கு சிறந்தது. எளிதானது.
தொடரும்...




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக