செவ்வாய், 5 நவம்பர், 2019

ஹஜ்ஜின் சிறப்புக்களும் அதன் சட்டங்களும்.

ஹஜ்ஜின் சிறப்புக்கள்.


அமல்களில் சிறந்தது எது? என்று நபிகள் நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புவதென்று விடையளித்தார்கள். அதற்கு அடுத்தபடியாக எது? என்று கேட்கப்பட்டது. அதற்குஇ ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ் என்று நபிகளெம் பிரான் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் விடை பகர்ந்தார்கள்.” (புகாரி)

“ஒரு உம்ராச் செய்து விட்டு மற்றொரு உம்ரா செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஓப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை” என்று பெருமானார் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி)

“உடலுறவு கொள்ளாமல், தீய காரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற்றவராக அவர் திரும்புகிறார்” என்றும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள். (புகாரி)

ஹஜ், உம்ராவை சிறப்பித்து ஏராளமான ஹதீதுகள் பதிவாகியுள்ளன. பெருமானார் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களும் உலகில் தோன்றிய சகல நபிமார்களும் ஹஜ்ஜினை நிறைவேற்றியுள்ளார்கள். 

பெண்கள் மீதும் ஹஜ் கடமை.


“அல்லாஹ்வின் தூதரே! பெண்கள் மீது ஜிஹாத் கடமையா? என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் போரில்லாத ஜிஹாத் அவர்கள் மீது கடமையாக உள்ளது. அது தான் ஹஜ்ஜும் உம்ராவும் என்று விடையளித்தார்கள்.” (அஹ்மத், இப்னு மாஜா)

தக்க துணை அவசியம்.


பெண்கள் தக்க துணையின்றி ஹஜ் பயணம் உட்பட மூன்று நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களைக் கொண்ட எந்தவொரு பயணமும் மேற்கொள்ளக் கூடாதென்பது இஸ்லாமிய சட்டமாகும். கணவர் அல்லது மஹ்ரமான ஆண் அல்லது நம்பிக்கைக்குரிய பயணத் தோழிகள் பெண்களுக்கு துணையாக இருப்பது அவசியம். 

“திருமணம் செய்யத் தகாத ஆண் உறவினருடன் அன்றி பெண்கள் பயணம் மேற்கொள்ளக் கூடாதென்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தமது சொற்பொழிவில் சொன்னபோது ஒரு மனிதர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்ய நாடுகிறார். நான் இன்னின்ன போர்களில் பங்கெடுக்க நாடுகிறேன் என்று கூறினார். அதற்கு நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நீர் புறப்பட்டுச் சென்று உம் மனைவியுடன் ஹஜ் செய்வீராக என்று கூறினார்கள்.” (புகாரி)

சிறுவர்கள் ஹஜ் செய்யலாமா?


சிறு குழந்தைகளைச் சுமந்திருந்திருக்கும் பெண்மணிகள் அதைக் காரணம் கூறி  ஹஜ் பயணத்தினை தள்ளிப் போடத் தேவையில்லை. சிறு குழந்தை களையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்ல இயலும்.

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் “ரவ்ஹா” என்ற இடத்தில் ஒரு பயணக் கூட்டத்தைச் சந்தித்தார்கள். இந்தக் கூட்டத்தினர் யார் என்று விசாரித்தனர். முஸ்லிம்கள் என்று அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் நீங்கள் யார்? என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் விசாரித்தனர். நான் அல்லாஹ்வின் தூதர் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள். அப்பொது ஒரு பெண்மணி சிறு பையனை தூக்கிக் காண்பித்து இவருக்கு ஹஜ் உண்டா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூலி உனக்கு உண்டு என்று விடை பகர்ந்தார்கள்.” (முஸ்லிம்)

“நான் ஏழு வயது சிறுவனாக இருக்கும்போது நபிகள் நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுடன் என் தந்தை என்னையும் ஹஜ் செய்ய வைத்தார்கள் என்று நபித் தோழர் ஸாயிப் பின் யஸீத் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்.” (புகாரி)

சிறுவர்கள் மீது ஹஜ் கடமையில்லாவிட்டாலும் அவர்களையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்ல முடியும். அவ்வாறு சிறு பராயத்தில் ஹஜ் செய்தவர்கள் பருவ வயதை அடைந்து அக்கடமையினை நிறைவேற்றுவதற்கான வசதி வா ய்ப்பைப் பெற்றால் அப்பொது அவர்கள் ஹஜ் செய்வது கடமையாகும். 

முதியவர்கள், நோயாளிகள் மீது ஹஜ் கடமையா?


“அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்ய அங்கு செல்ல சக்தியுள்ளவர்கள் மீது கடமையாகும்.”  (ஆல இம்ரான் 96)

இந்த வசனத்தின் அடிப்படையில் ஹஜ் செய்வதற்கு விரும்பும் ஒருவரிடம் பொருளாதார வசதி மட்டுமல்ல பிரயாணம் செய்வதற்கான உடல் நிலையும் அவருக்கு சீராக இருத்தல் வேண்டும். பிரயாணமே செய்ய இயலாத முதியவர்கள், தீராத நோயாளிகள் போன்றோர் எவ்வளவு வசதிகளைப் பெற்றிருந்தாலும் அவர்கள் மீது ஹஜ் கடமையாகாது. 

ஆனாலும் அவர் தன்மீதான கடமையினை நிறைவேற்றி வைக்க அவருக்குப் பகரமாக இன்னுமொருவரை அனுப்பி வைக்க முடியும். தீரும் என்ற எண்ணமுள்ள நோயாளிகள் அவருக்காக ஹஜ் அல்லது உம்ராச் செய்திட இன்னுமொருவரை அனுப்பி வைக்க முடியாது. அவ்வாறு அனுப்பி வைக்கப்படுபவர் ஹஜ் கடமையினை பூர்த்தி செய்த ஒருவராக இருத்தல் வேண்டும். “களாவான” ஹஜ் அல்லது “நேர்ச்சையான ஹஜ்” போன்றவற்றை நிறைவேற்ற வேண்டியவராக இருக்கவும் கூடாது. 

ஹஜ்ஜே செய்யாத ஒருவர் இன்னுமொருவருக்காக இஹ்ராம் கட்டினால் அந்த ஹஜ் அவர் மீது கடமையான ஹஜ்ஜாக நிறைவேறிவிடும். அவ்வாறே ஹஜ்ஜினை “களாச்” செய்யவேண்டியவர் அல்லது ஹஜ் செய்வதாக “நேர்ச்சை” செய்த ஒருவர் பிறருக்காக இஹ்ராம் கட்டினால் அது அவரது “களா” ஹஜ்ஜாக அல்லது “நேர்ச்சை” செய்த ஹஜ்ஜாக நிறைவேறிவிடும். இதற்கெல்லாம் பிறகுதான் பிறருக்காக ஹஜ் மற்றும் உம்ரா செய்ய முடியும். 


ஒரு பயணத்தில் பல ஹஜ்ஜுகள்மற்றும் பல உம்ராக்கள் செய்ய முடியூமா?


ஒரே வருடத்தில் ஒரே பயணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உம்ராச் செய்த தற்கான சான்று எதுவும் இல்லை. அவ்வாறே ஒரு பயணத்தில் பல உம்ரா க்கள் செய்வது கூடாது என்பதற்கான தடையையும் காண முடியவில்லை. இருந்தும்கூட இதற்கு இமாமுனா ஷாபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அன்ன வர்கள் அனுமதி வழங்கியிருப்பதுடன், இப்னு தைமிய்யா “பித்ஆ” என்று கூறுகிறார். ஆனாலும் பின் பாஸ் என்பவர் கூடும் என்று கூறுகிறார். ஒரு நாளில் பல உம்ராக்கள் செய்யவும் முடியும் என்றும் இவர் கூறுகின்றார். தனக்காக என்றாலும் சரி பிறருக்காக என்றிருப்பினும் சரியே. 

தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...